மதுபானத்தில்தான் கவனம்: அரவிந்த் கேஜ்ரிவாலை விளாசிய அன்னா ஹசாரே
மதுபானத்தில்தான் கவனம்: அரவிந்த் கேஜ்ரிவாலை விளாசிய அன்னா ஹசாரே
டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பணம், அதிகாரத்தை சுவைத்துப் பழகிவிட்டார், அவரின் கவனம் அனைத்தும் மதுபானக் கொள்கை மீதுதான் இருந்தது அதுதான் அவரை தோற்கடித்தது என்று சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே வேதனையுடன் குறிப்பிட்டார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியை ஆண்ட ஆம் ஆத்மி கட்சி, பாஜகவிடம் ஆட்சியை இழக்கும் சூழலி்ல் இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் அரவிந்த் கேஜ்ரிவால், பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவிடம் தோல்வி அடைந்தார்.
பாஜக தற்போது 11 தொகுதிகளில் வெற்றி பெற்று 37 தொகுதிகளில் முன்னிலையுடன் பெரும்பான்மையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் 27 ஆண்டுகளுக்குப்பின் பாஜக டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.
இதையும் படிங்க: பெண்ணுக்குத் தவறு செய்தால் கடவுள் நிச்சயம் தண்டிப்பார்..! கேஜ்ரிவால் குறித்து சுவாதி மாலி வால் பேட்டி
3வது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என எதிர்பார்த்த அந்த கட்சியினருக்கு தோல்வி பெருத்த இடியாக இறங்கியுள்ளது. அரவிந்த் கேஜ்ரிவாலின் தோல்வி, ஆம் ஆத்மி ஆட்சியை இழந்தது குறித்து சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே அளித்த பேட்டியில் கூறுகையில் “ நான் அரவிந்த் கேஜ்ரிவாலிடம் பலமுறை கூறி ஆலோசனையில் பணம், அதிகாரத்தை சுவைத்துப் பார்க்காதே என்று அறிவுரைத்தேன். அதுமட்டுமல்லாமல் டெல்லியில் நடந்த மதுக்கொள்கை முறைகேடுதான் அரவிந்த் கேஜ்ரிவாலின் மதிப்பையும், ஆட்சிக்கும் கெட்டபெயரை ஏற்படுத்தியது.
மதுபானத்தின் அதிக கவனம் கொள்ளாதே என்று கேஜ்ரிவாலிடம் தெரிவித்தைன். ஆனால், அவரோ என் ஆலோசனையை காது கொடுத்து கேட்காமல் மதுபானத்தில் மட்டும்தான் கவனமாக இருந்தார். தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தும்போது அவர்களின் நடத்தை, சமூகத்தில் ஒழுக்கம், குற்றச்சாட்டில் சிக்காதவர்கள், தியாகமனப்பான்மை உள்ளவர்களை தேர்வு செய்யுங்கள் என்றேன். இந்த தகுதிகள் வேட்பாளர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.
நான் அறிவுரை கூறிய எதையும் கேஜ்ரிவால் காது கொடுத்து கேட்கவில்லை. பணம், அதிகாரத்தை சுவைக்கத் தொடங்கினார். இதுதான் தோல்விக்கு கொண்டு சென்றது” எனத் தெரிவித்தார். கடந்த 2022ம் ஆண்டு அண்ணா ஹசாரே, முதல்வர் கேஜ்ரிவாலுக்கு எழுதிய கடிதத்தில் “நீங்கள் முதல்வராக வந்தபின் உங்களுக்கு நான் கடிதம் எழுதுவது இதுதான் முதல்முறை. ஏனென்றால், உங்கள் அரசின் மதுக்கொள்கை குறித்து சமீபத்தில் வந்த செய்திகள் எனக்கு வேதனையை அளி்த்தன. மது, அதிகாரம் அதிகம் எடுத்துக்கொண்டால் அழிவுக்கு கொண்டு செல்லும். நீங்கள் அதிகாரத்தால் கெட்டுவிட்டீர்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: அசைக்க முடியா மன்னன் அரவிந்த் கெஜ்ரிவால் படுதோல்வி..! 3182 வாக்குகளில் பாஜகவின் பர்வேஷிடம் வீழ்ந்தார்..