கோவில்பட்டியில் பட்டியல் சமூக மாணவியை காலில் விழ வைத்து சான்றிதழ் தர மறுப்பு - தனியார் கல்வி நிறுவன நிர்வாகி மீது வன்கொடுமை வழக்கு
கோவில்பட்டியில் பட்டியல் சமூக மாணவியை காலில் விழ வைத்து சான்றிதழ் தர மறுப்பு
கோவில்பட்டியில் மாணவிகளிடையே ஏற்பட்ட தகராறில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த மாணவியை சக மாணவி காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்து, சான்றிதழ்களை தர மறுத்த தனியார் கல்வி நிறுவன கண்காணிப்பாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி - பசுவந்தனை சாலையில் தனியார் மருத்துவ சான்றிதழ் படிப்பிற்கான கல்வி நிறுவனம் உள்ளது. தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பகுதி கிராமத்தை சேர்ந்த மாணவி பாலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உள்பட பலர் மருத்துவ சான்றிதழ் படிப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 31ம் தேதி பாலாவுக்கும், சக மாணவி ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வி நிலைய கண்காணிப்பாளர் கிருஷ்ண பிரியா விசாரணை நடத்தி, மாணவி பாலாவை கண்டித்து தாக்கியதாகவும், சக மாணவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளார். சமுதாய ரீதியாக அவதூறாக பேசியதாக மாணவி பாலா, கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் மற்றும் மேற்கு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
இதையும் படிங்க: இன்போசிஸ் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு: என்ன வழக்கு?
அதில், கண்காணிப்பாளர் கிருஷ்ணபிரியா என்னை தாக்கி, சக மாணவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால்தான் எனது சான்றிதழ்களை தருவதாக கூறினார். வேறு வழியின்றி அந்த மாணவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டேன். அதன் பிறகும் ஒரு லட்சம் ரூபாய் தந்தால்தான் சான்றிதழ்களை தருவதாக கிருஷ்ணபிரியா மிரட்டுகிறார். விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி, கிருஷ்ணபிரியா மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அந்த தனியார் கல்வி நிறுவனத்தின் தரப்பில் கேட்டபோது இது பொய்யான புகார். சட்டப்படி எதிர்கொள்வோம் என்றனர்.
இதையும் படிங்க: Breaking News: முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது டெல்லி சி.பி.ஐ. வழக்குப்பதிவு..!