சித்திரை திருவிழாவுக்கு தயாராகும் மாமதுரை.. மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு தேதி குறிச்சாச்சு..!
மதுரையை ஆளும் சொக்கநாதர் - மீனாட்சி திருக்கல்யாணம் மே 8ம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டில் கோயில் திருவிழாக்களுக்கா பஞ்சம். அதுவும் கோடைகாலம் தொடங்கியது முதல் அடுத்த ஆறுமாத காலத்திற்கு அம்மன் கோயில்களில் விழாக்கள் களைகட்டும். அதுவும் கோயில் நகரமான மதுரை, கும்பகோணம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய ஊர்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருவிழா தான். குறிப்பாக மதுரை சித்திரை திருவிழா என்பது தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்று.
அப்படியென்ன வேறெந்த விழாவுக்கும் இல்லாத சிறப்பு சித்திரை திருவிழாவுக்கு என்றால்.. ஒன்றா, இரண்டா ஏராளமான காரணங்கள் உள்ளன.. தமிழகத்தில் சைவம் - வைணவம் என்ற இருபெரும் ஆன்மிக மரபு உள்ளது. 10-ம் நூற்றாண்டு வரையில் இவ்விரண்டு பிரிவினரும் எதிரும், புதிருமாக இருந்த நிலையில், சித்திரைத் திருவிழா சைவ-வைணவ மரபின் ஒற்றுமைக்காக உருவாக்கப்பட்ட விழா என்பதே இதன் முதல் சிறப்பு..
இதையும் படிங்க: பிரித்விராஜ், மோகன்லால் படங்களுக்கு செருப்படி... தமிழக விவசாயிகள் கொந்தளிப்பு..!
மதுரையை ஆளும் சொக்கநாதர் - மீனாட்சிக்கு திருக்கல்யாணம் நடைபெறுவதும், அதற்கு சகோதரரான கள்ளழகர் சீர்கொண்டு வருவதும் என விழா களைகட்டும். கிட்டத்தட்ட 16 நாட்களுக்கு வரிசைக்கட்டும் இந்த விழாவின் உச்சம் என்பது திருக்கல்யாணமும் அதனைத் தொடர்ந்து கள்ளழகர் ஆற்றில் இறங்குவதும் தான்.
திருக்கல்யாணத்தின் போது மீனாட்சி அம்மனுக்கு புதுத்தாலி அணிவிக்கப்படும். அன்றையதினம் மதுரை மட்டுமல்லாது தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஆன்மிக பக்தர்கள் மதுரையில் குவிவது வாடிக்கை. அப்போது திருமணமான பெண்கள் தாங்களும் தாலிக்கயிறு மாற்றிக் கொள்வார்கள். மீனாட்சி அம்மனைப் போன்றே தாங்களும் நித்யசுமங்கலியாக இருப்போம் என்பது அவர்களின் நம்பிக்கை.
இவ்வளவு சிறப்புமிக்க சித்திரைத் திருவிழாவுக்கான அட்டவணையை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் 29 - சித்திரை திருவிழா கொடியேற்றம்,. மே 06 - மீனாட்சி பட்டாபிஷேகம்,. மே 08 - மீனாட்சி திருக்கல்யாணம்,. மே 09 - மீனாட்சி திருத்தேரோட்டம்., மே 10 - கள்ளழகர் புறப்பாடு., மே 11 - கள்ளழகர் எதிர்சேவை., மே 12 - கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல் என தேதி குறிக்கப்பட்டுள்ளது.
கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுப்பதற்காக மதுரைக்கு வருவது விழாவின் முக்கிய அம்சமாகும். அதே போல் சித்திரைத் திருவிழாவின் கடைசிநாளன்று தேவேந்திர பூஜை நடத்தப்படும். இது மண் செழிப்பதற்காக நடத்தப்படும் மிக அற்புதமான பூஜை ஆகும். கள்ளழகர், அழகர்மலை சென்றடைவதுடன் மதுரை சித்திரை திருவிழா நிறைவு பெறும். சைவத்தையும், வைணவத்தையும் ஒன்றுபடுத்தி மதுரையின் பிரதான இனப்பிரிவினரிடையே ஒற்றுமையை நிலைநிறுத்தி கொண்டாடப்படும் இந்த சித்திரைத் திருவிழாவை தமிழர்களாக பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது பார்த்து விட வேண்டும்.
இதையும் படிங்க: மதுரையில் காவலர் அடித்துக்கொலை.. மதுக்கடைகளை மூட மனமில்லையா..? அன்புமணி ஆதங்கம்..!