எல்.ஐ.சி முகவருக்கு விபூதி அடித்த பெண்கள்... ஷாக்கான குமரி மாப்பிள்ளை!!
திருமத்திற்கு பெண் தேடி ஆன்லைனில் விளம்பரம் கொடுத்திருந்த கன்னியாகுமரியை சேர்ந்த ஒருவர் 4 பெண்களால் ஏமாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக ஆன்லைனில் பெண் பார்த்து திருமணம் செய்வது பெரிய பிரச்சனையில் தான் முடிகிறது. அதுவும் திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்வது, பணம், நகைகளை கொள்ளையடிப்பது என பல குற்றச்சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக திருமாகமல் பல நாட்களாக வரன் தேடுபவர்களை தான் மோசடி கும்பல் குறிவைக்கிறது. இதில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் மோசடியில் ஈடுபட தொடங்கிவிட்டனர். ஆன்லைனில் வரன் தேடவே பயப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் 2வது திருமத்திற்கு பெண் தேடி ஆன்லைனில் விளம்பரம் கொடுத்திருந்த கன்னியாகுமரியை சேர்ந்த ஒருவர் 4 பெண்களால் ஏமாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த 55 வயதான நபர் எல்.ஐ.சி. முகவராக உள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், 2 மகள்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவருக்கும் இவரது மனைவிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவரை விட்டு மனைவி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து சென்றுள்ளார்.
இதற்கிடையே எல்.ஐ.சி. முகவரின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவரை கவனிக்க ஆள் வேண்டும் என்பதற்காக எல்.ஐ.சி. முகவர் 2வது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இதை அடுத்து ஆன்லைனில் திருமண வரன் தேடும் இணையதளத்தில் பதிவு செய்து வைத்துள்ளார். இவரது விளம்பரத்தை பார்த்து மதுரையில் இருந்து எல்ஐசி முகவருக்கு ஒரு போன் வந்துள்ளது. அதில் மதுரையை சேர்ந்த முருகேஸ்வரி என்ற பெண் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்.. 2 ரவுடிகள் வெட்டிக்கொலை.. தீர்த்துக்கட்ட திட்டம் போட்டவனை குளோஸ் செய்த கும்பல்..!
மேலும் அவரை திருமணம் செய்ய தான் விரும்புவதாகவும் குடும்பத்தினருடன் நேரில் பார்க்க வர விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதற்கு சரி என்று எல்.ஐ.சி முகவர் கூறியதை அடுத்து முருகேஸ்வரி, அவரது தங்கை கார்த்திகையாயினி, முத்துலட்சுமி, போதும் பொண்ணு ஆகிய 3 பேருடன் எல்.ஐ.சி. முகவர் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு எல்.ஐ.சி. முகவருடன் உறவினர்களும் இருந்துள்ளனர்.
அப்போது 2வது திருமணம் செய்ய சம்மதித்தால், அந்த பெண்ணுக்கு சுமார் 8 பவுன் தங்க நகைகளை கொடுக்க இருப்பதாக கூறி அதனை காட்டியுள்ளார் எல்.ஐ.சி முகவர். அதில் தங்க வளையல்கள், மோதிரம் ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது. இதனை காட்டிவிட்டு வந்தவர்களை உபசரிப்பதில் பிஷியானர் எல்.ஐ.சி முகவர். இதற்கிடையே நகைகளை அங்கிருந்த மேஜை டிராயரில் வைத்தை பார்த்த அந்த 4 பெண்களும் அதனை திருடியதாக தெரிகிறது.
இதை அறியாத எல்.ஐ.சி முகவர், இவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்ட பின், மறுநாள் காலை நகை வைத்திருந்த இடத்தை பார்த்தபோது அவற்றை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது மகன், மகளிடம் கூறியிருக்கிறார். பின்னர் தன்னை பார்க்க வந்த பெண்கள் மீது சந்தேகமடைந்த அவர், அவர்களுக்கு போன் செய்த போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளது. இதை அடுத்து காவல்நிலையத்தில் சம்பவம் குறித்து அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை சேர்ந்த 4 பெண்களையும் பிடித்து விசாரித்துள்ளனர்.
அப்போது அவர்கள் நகைகளை திருடியது தெரியவந்தது. இதுமட்டுமின்றி மாப்பிள்ளை பார்க்க வந்த அனைவரும் திருமணம் ஆனவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து முருகேஸ்வரி, கார்த்திகையாயினி, முத்துலட்சுமி, போதும் பொண்ணு ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது வேறு ஏதேனும் திருட்டு வழக்குகள் உள்ளனவா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பிரபல மருத்துவமனையில் பில்லி, சூன்யம்? தோண்டத்தோண்ட கிடைத்த எலும்புகள், முடிகள், அரிசி.. 20 ஆண்டுகளில் ரூ.1500 கோடி நிதி மோசடி..!