ராயப்பேட்டை மெட்ரோ ரயில் பணிகளில் சுணக்கம்.. முட்டுக்கட்டை போட்ட நிறுவனத்திற்கு நீதிமன்றம் சாடல்..!
மெட்ரோ ரயில் நிலையத்துக்காக யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக, ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள பழமையான ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோவில் ராஜகோபுரத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஆலயம் காப்போம் கூட்டமைப்பு சார்பில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில், மெட்ரோ ரயில் நிலைய நுழைவு, வெளியேறும் பாதை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன வளாகத்தில் மாற்றப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்ததை பதிவு செய்துகொண்டு வழக்கை முடித்து வைத்தது.
இந்நிலையில், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 837 சதுர மீட்டர் பரப்பு நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதையும் படிங்க: தனுஷின் தந்தை கஸ்தூரிராஜாவுக்கு எதிரான வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் கூறியது என்ன..?
இந்த நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஏற்கனவே முன் அனுமதி பெற்று 200 கோடி ரூபாய் செலவில் யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் கட்டுமானங்கள் மேற்கொண்டுள்ள நிலையில், உயர் நீதிமன்றத்தில் தெரிவித்த உத்தரவாதத்தை செயல்படுத்தும் விதமாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறி, அந்த நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், பொதுமக்கள் பாதுகாப்பு, வசதி மற்றும் தொழில்நுட்ப காரணங்களுக்காக மெட்ரோ ரயில் நிலைய திட்டத்தில் மாற்றம் செய்யப்படவில்லை எனத் தெரிவித்த நீதிபதி, பழையபடி கோவில் முன் மெட்ரோ ரயில் நிலையம் அமைத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை போன்ற 400 ஆண்டுகள் பழமைமிக்க ஒரு நகரத்தில் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளும்போது எதிர்கொள்ளும் முக்கிய சவால், நில கையகப்படுத்துதல் தான். ஏற்கனவே குறுகலான சாலைகள், கோயில்கள் என திரும்பிய திசையெல்லாம் சென்னை மாநகரம் தத்தளிக்கும் படகுபோல் தான் உள்ளது. குறைந்தபட்ச ஆறுதலாக போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக மெட்ரோ ரயில் சேவை உள்ளது. ஆனால் அதன் 4 மற்றும் 5-வது கட்ட வழித்தட கட்டுமானத்திற்கு வழக்குகள் என்ற பெயரில் ஏராளமான முட்டுக்கட்டை போடப்பட்டு வருகிறது.
தற்போது சென்னை விமான நிலையம் முதல் சென்ட்ரல் வரை ஒரு வழித்தடத்திலும், சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை மற்றொரு வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. மறுபுறம் இதனை பூவிருந்தவல்லி, சிறுசேரி,கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே போரூர் முதல் பூவிருந்தவல்லி வரையிலான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. அதற்கும் பல வழக்குகள் போடப்பட்டதே காரணமாக அமைந்தது. உள்கட்டமைப்பு என்று வரும்போது அரசு திடமான முடிவுகள் எடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: மகளிர் மேம்பாட்டுக்கு தனித்துறையை உருவாக்குங்கள்.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை..!