பிரயாக்ராஜ் நதி நீர் குளிப்பதற்கு தகுதியற்றது..! மனித கழிவு கிருமிகள் அளவு அதிகரிப்பு என எச்சரிக்கை..!
கும்பமேளா பக்தர்கள் புனித நீராடும் நதியில் அளவுக்கு அதிகமான மனித மலக்கழிவுகளின் கிருமிகள் கலந்திருப்பதால், மனிதர்கள் குளிப்பதற்கு தகுதியற்றது என்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு அறிக்கை அளித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் 12 ஆண்டுகளுக்குப்பின் இந்துக்களின் மகா கும்பமேளா புனித திருவிழா நடந்து வருகிறது. இங்குள்ள கங்கை நதியில் திரிவேணி சங்கமத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், சாதுக்கள், அகோரிகள் புனித நீராடுகிறார்கள். கடந்த ஜனவரி 13ம் தேதி முதல் இதுவரை திரிவேணி சங்கமத்தில் 54.31 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். இதில் நேற்று இரவு 8மணிக்குள் மட்டும் 1.35 கோடி பக்தர்கள் புனிதநீராடியுள்ளனர். இந்நிலையில் கங்கை நதியில் அளவுக்கு அதிகமான மனிதக் கழிவுகள், கிருமிகள் கலப்பதால் மனிதர்கள் குளிப்பதற்கு தகுதியற்றதாக மாறிவிட்டது, கிருமிகள் நிறைந்ததாக இருக்கிறது என்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
பிரயாக்ராஜ் நகரில் பாயும் கங்கை, யமுனை நதியின் தரம் குறித்து ஆய்வு செய்யவேண்டும், கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுதிர் அகர்வால், வல்லுநர் உறுப்பினர் செந்தில்வேல் ஆகியோர் இந்த மனுவை விசாரித்து தேசிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தனர்.
இதையும் படிங்க: கும்பமேளாவே வேஸ்ட்.! எந்தப் பயனும் இல்லை.. கடித்துக் குதறிய லாலு யாதவ்..!
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் மத்திய மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் கடந்த 3ம் தேதி அளித்த அறிக்கையில் “ உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளாவில் மக்கள் அதிக அளவில் கூடி நதியில் புனித நீராடுகிறார்கள். இதனால் தண்ணீரில் இருக்க வேண்டிய பீகல் ஃகாலிபார்ம் அளவு அதிகரித்துள்ளது. பிரயாக்ராஜ் நகரில் பாயும் நதியின் பல்வேறு இடங்களில் நீர் பரிசோதனை செய்ததில், மனித மலக்கழிவுகளின் கிருமிகள் கலந்திருப்பதால், மனிதர்கள் குளிப்பதற்கு தகுதியற்ற நீராகமாறிவிட்டது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அளவுகோலின்படி 100 மில்லி தண்ணீரில் பீகல் கோலிஃபார்ம்(faecal coliform )2500யூனிட்கள் வரை இருக்கலாம். ஆனால், தற்போது அந்த அளவை மீறி சென்றுவிட்டது ” எனத் தெரிவித்துள்ளது. ஆனால், இதுவரை உத்தரப்பிரதேச மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் எந்த முழுமையான அறிக்கையும் வழங்கவில்லை என்பதால், வழக்கை நாளை(19ம் தேதி) ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: 7 ஆயிரம் பெண்கள், மகா கும்ப மேளாவில் துறவறம் பூண்டனர்; பெரும்பான்மையினர் பட்டதாரிகள்