ஓபிஎஸ், டிடிவி தினகரனை கை கழுவுகிறதா பாஜக.? எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடி வியூகம்!!
அதிமுக உள் விவகாரங்களில் அதிமுக தலையிடாது என்று அமித் ஷா தெரிவித்திருப்பதன் மூலம், ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றோரை பாஜகவும் கை கழுவி விடுகிறதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில் மார்ச் 25ஆம் தேதி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென்று டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். இதனால், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உருவாகி விட்டதாக பேச்சு எழுந்தது. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் இதை மறுத்தனர். பாஜகவோடு நெருக்கமாக இருக்கும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரோடு உடன்பட முடியாது, மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் இணைந்து பணியாற்ற முடியாது போன்ற நிபந்தனைகளை அதிமுக பாஜகவுக்கு விதித்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், சென்னை வந்த மத்திய உள்துறை அமித் ஷா சென்னையில் தமாக தலைவர் ஜி.கே. வாசன், ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்டோரைச் சந்தித்து பேசினார். ஆனால், ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றோரை அமித் ஷா சந்தித்து பேசவில்லை. பின்னர் கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செய்தியாளர்களைச் அமித் ஷா சந்தித்தார். அமித் ஷாவின் வலதுபக்கத்தில் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணியும் உள்ளிட்ட அதிமுகவினரும், இடது பக்கத்தில் அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் அமர்ந்திருந்தனர். பேட்டியின் தொடக்கத்திலேயே உள்துறை அமித் ஷா, 2026 சட்டப்பேரவைத் தேர்தலை அதிமுக - பாஜக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்கொள்ளும் என்று தெரிவித்தார்.
அப்போது அவரிடம் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் குறித்த தேசிய ஜனநாயக கூட்டணியின் நிலைப்பாடு என்ன, ஒன்றிணைந்த அதிமுகவை உருவாக்கும் திட்டம் இருக்கிறதா என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிடப் போவதில்லை. தேர்தல் தொடர்பாக நாங்கள் அனைவரும் கலந்துபேசி அதற்கான திட்டமிடுதலை உருவாக்குவோம்” என்று அமித் ஷா பதிலளித்தார். இதன் மூலம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் நிலை என்ன என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: பாஜகவுடன் கூட்டணி அமைத்து தமிழக மக்களுக்கு துரோகம்.. அதிமுகவை ரவுண்டு கட்டிய கனிமொழி.!
ஏற்கெனவே 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக ஆதரவுடன் ஓபிஎஸ் சுயேச்சையாக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இப்போதும் பாஜகவுடன் நெருக்கமாக இருக்கிறார். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியோ, “கட்சியில் ஓபிஎஸ்-ஐ இணைப்பதற்கு சாத்தியமே கிடையாது. பிரிந்தது, பிரிந்ததுதான்.பிரிந்தது மட்டுமல்ல, அதிமுகவை எதிரிகளிடம் அடமானம் வைப்பதை எங்களால் தாங்க முடியவில்லை.ஓபிஎஸ் தனது தலைமையில் ரவுடிகளைக் கூட்டிச் சென்று, அதிமுக தொண்டர்களின் கோயிலாக இருக்கும் தலைமைக் கழக அலுவலகத்தை என்று உடைத்தார்களோ, அப்போதே, அவர் கட்சியில் இருப்பதற்கு தகுதியில்லாதவர் ஆகிவிட்டார்." என்று தெரிவித்திருந்தார்.
இந்த சூழகில் அதிமுக உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது என்று அமித் ஷா தெரிவித்திருப்பதன் மூலம், ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றோரை பாஜகவும் கை கழுவி விடுகிறதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: திமுகவை வேரோடு அகற்றுவோம்.. அதிமுக - பாஜக கூட்டணி அமைந்த பிறகு பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு.!