போக்சோவில் சிக்கிய போதகர்.. ஜாமின் கேட்டு கோர்ட்டில் மனு.. விரைவில் விசாரணை..!
கோவையை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசார் வழக்குபதிந்து தேடி வரும் சூழலில் சென்னை உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு அளித்துள்ளார்.
கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள கிங் ஜெனரேஷன் என்ற சர்ச்சில் பாதிரியாராக பணியாற்றி வந்தவர் ஜான் ஜெபராஜ் (வயது 32). இவர் கிறிஸ்துவ பாடல்களை பாப் இசையில் பாடி, நடனமாடி அதன் மூலம் பிரபலமானார். பல்வேறு மத போதனை நிகழ்ச்சிகளை பிரமாண்டமாக நடத்தி வந்தவர். இவருடைய பிரம்மாண்ட மத போதனைகள் மூலம் சமூக வலைத்தளங்களிலும் பிரபலமாக இருந்தார். தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று கிறிஸ்தவ பாடல்களை பாடியும், ஆராதனையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு ஜான் ஜெபராஜ், கோவை ஜி.என் மில்ஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் நடந்த பார்ட்டி ஒன்றின் போது, 17 வயது சிறுமிக்கும், அச்சிறுமியின் அண்டை வீட்டுக்காரரான 14 வயது சிறுமிக்கும் முத்தம் கொடுத்து பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்து உள்ளது.
சிறுமிகள் வீட்டிற்கு வரும்போது எல்லாம் மத போதகர் ஜான் ஜெபராஜ் பலமுறை பாலியல் ரீதியாக தொல்லை செய்ததாகவும், இந்த விவரத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமிகள், பாதிரியாரின் தொடர் தொல்லை குறித்து தங்களது பெற்றோரிடம் கண்ணீருடன் தெரிவித்து உள்ளனர்.
இதை அடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், கோவை மத்திய போலீசார் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரே நேரத்தில் பாலியல்… அனாதை பெண்ணையும், அடுத்த வீட்டு சிறுமியையும் 'ரட்சித்த' மத போதகர் ஜான் ஜெபராஜ்..!
தன்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த ஜான்ஜெபராஜ் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த தனிப்படையினர் நெல்லை, குமரி மற்றும் தென்காசி மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜான் ஜெபராஜ் பெங்களூரு சென்று அங்கிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயற்சி செய்வதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து போலீசார் உஷாராகினர். ஜான் ஜெபராஜ் விமானம் மற்றும் கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்வதை தடுக்க அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.
அந்த லுக்-அவுட் நோட்டீசில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர், முகவரி, அவரது புகைப்படம், பாஸ்போர்ட் குறித்த தகவல், அவர் என்ன வழக்கில் சிக்கி உள்ளார் என்ற விவரம் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் போக்சோ வழக்கில் தலைமறைவாக உள்ள மத போதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனார். ஜான் ஜெபராஜ் மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இதையும் படிங்க: விடுதி மாணவர்களை பதம் பார்த்த பாதிரியார்.. பாலியல் ஃபாதரை கைது செய்த போலீஸ்..!