×
 

நிலத்தகராறு காரணமாக முன்விரோதம்.. விவசாயி வெட்டி கொலை.. போலிஸ் ஸ்டேஷன் முன்பு இறுதி சடங்கு..?

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே அரிவாளால் வெட்டி விவசாயி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் போலீஸ் நிலையம் முன்பு பாடை கட்டி ஒப்பாரி வைத்த இறுதி சடங்கு செய்ய உள்ளதாக அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆம்பலாப்பட்டு வடக்கு கண்டியர் தெருவை சேர்ந்தவர் தீர்க்கரசு (வயது 51). விவசாயி. இவருக்கும் பாப்பாநாடு ஆவிட நல்ல விஜயபுரத்தில் வசிக்கும் திருக்குமார் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு தீர்க்கரசுவை ஒரு கும்பல் வழிமறித்து அறிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இது குறித்து பாப்பாநாடு போலீசார் திருக்குமார் அவருடைய அண்ணன் சசிகுமார் மற்றும் சிலர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆம்பலாப்பட்டு கிராம மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாப்பாநாடு போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதன் பிறகு இந்த வழக்கில் தொடர்புடைய திருக்குமாரின் அண்ணன் சசிகுமார் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் திருக்குமார் உள்ளிட்டோரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த நிலையில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திர்க்கரசு நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்தனர். இதனிடையே ஆம்பலாபட்டு கிராம மக்கள் நேற்று திடீரென பாப்பாநாடு போலீஸ் நிலையம் முன்பு ஒன்று திரண்டனர். அங்கு பந்தல் அமைத்து பாடை கட்டி தீர்க்கரசு உருவப்படத்திற்கு மாலை அணிவித்தனர்.

இதையும் படிங்க: வேலை பிடிக்கலைனா விடமாட்டியா? வடமாநில இளைஞருக்கு கத்திக்குத்து.. கொடுங்கையூரில் பரபரப்பு..!

பெண்கள் ஒப்பாரி வைத்தனர். இந்த வழக்கில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இந்த நூதனப் போராட்டம் நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர். இதை அறிந்த மாவட்ட எஸ்பி ராஜாராம் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது தீர்க்கரசுவின் கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். முறைகேடான வகையில் தீர்க்கரசுவை ஏமாற்றி எழுதி வாங்கிய நிலத்தை அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். திருக்குமாருக்கு ஆதரவாக செயல்படும் பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆம்பலாப்பட்டு கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். 

இந்த கோரிக்கைகளை கேட்டறிந்த மாவட்ட எஸ்பி ராஜாராம் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை விரைவாக கைது செய்வதாகவும், போலீஸ் அதிகாரி பாரபட்சமாக செயல்பட்டு இருந்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், பாதிக்கப்பட்ட திர்க்கரசுவின் குடும்பத்தினருக்கு சட்டப்படி தேவையான உதவிகள் கிடைக்க வழிவகை செய்வதாகவும் கிராம மக்களிடம் உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

போலீஸ் நிலையம் முன்பு கிராம மக்கள் பாடை கட்டி ஒப்பாரி வைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக போலீஸ் நிலையம் முன்பு இறுதி சடங்கு நடப்பதாக ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர். அதில் தீர்க்கரசுவின் இறுதி சடங்கு பாப்பாநாடு போலீஸ் நிலையம் முன்பு நடந்து வருவதாகவும், இதில் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு அதிகரித்தது.

இதையும் படிங்க: கே.என்.நேருவின் சகோதரரும் மகனும் சேர்ந்து வாய் பிளக்கவைக்கும் மோசடி… ED-யிடம் சிக்கிய ஆதாரங்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share