சிறுமியின் கனவில் வந்த சிவலிங்கத்தால் விபரீதம்: குடும்பத்தில் 8 பேரும் இப்போது சிறையில்
குஜராத் மாநிலத்தில் கனவை நம்பி சிவலிங்கத்தை திருடி வழிபாடு செய்த குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.
குஜராத் மாநிலம் துவாரகாவில் ஹர்ஷத் என்ற புனித தலம் பிரபலமானது. இங்கு பழமைவாய்ந்த பீத் பஞ்சன் மகாதேவ் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த சிவலிங்கம் திடீரென்று மாயமானது. ஒரு வேளை திருடியவர்கள் சிவலிங்கத்தை கடலில் வீசி இருப்பார்களோ என்று அதிகாரிகள் சந்தேகப்பட்டனர். பின்னர் அதிகாரிகள் கொடுத்த இதுபற்றிய புகாரில் போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின்போது போலீசாருக்கு துப்பு தொடங்கியது. குஜராத் மாநிலம் சபார்கந்தா மாவட்டம் ஹிமாத்நகரை சேர்ந்த ஒரு குடும்பம் தான் அந்த சிவலிங்கத்தை திருடி சென்றது என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ஹிமாத் நகருக்கு சென்று விசாரித்தனர். அப்போது ஹிமாத் நகரை சேர்ந்த மகேந்திர மக்வானா என்பவர் தான் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சிவலிங்கத்தை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து மகேந்திர மக்வானா, அவரது குடும்பத்தை சேர்ந்த வனராஜ், மனோஜ், ஜகத், 3 பெண்கள் உள்பட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது. அதாவது மகேந்திர மக்வானாவின் சகோதரின் மகளுக்கு சமீபத்தில் ஒரு கனவு வந்துள்ளது. அந்த கனவில் துவரகாவில் ஹர்ஷத்தில் உள்ள பழமைவாய்ந்த பீத் பஞ்சன் மகாதேவ் கோவிலின் சிவலிங்கம் தெரிந்துள்ளது. மேலும் அந்த சிவலிங்கத்தை வீட்டுக்கு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தால் துன்பங்கள் நீங்கி அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பது போல் அவர் கனவு கண்டுள்ளார்.இதுபற்றி அவர் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதையடுத்து தான் மகேந்திர மக்வானாவின் குடும்பத்தினர் ஒன்றாக இணைந்து சிவலிங்கத்தை திருட திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ‘மக்களுக்கு பிச்சையெடுக்கிற பழக்கம் அதிகமாயிருச்சு’! சர்ச்சையில் பாஜக முன்னாள் அமைச்சர்
இதற்காக அவர்கள் தங்களின் பகுதியில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்பழமைவாய்ந்த பீத் பஞ்சன் மகாதேவ் கோவிலில் அருகே பல நாட்கள் தங்கியிருந்துள்ளனர். அதன்பிறகு அவர்கள் ஆள்நடமாட்டம் இல்லாதபோது கோவிலில் நுழைந்து சிவலிங்கத்தை திருடி வீட்டுக்கு எடுத்து வந்துள்ளனர். மகா சிவராத்திரி தினத்தில் அந்த சிவலிங்கத்தை வீட்டில் வைத்து பிரதிஷ்டை செய்ய தயாராக இருந்த நிலையில் போலீசார் மொத்த குடும்பத்தையும் கைது செய்துள்ளனர். சிறுமி கண்ட கனவால் மொத்த குடும்பமே கோவிலில் இருந்து சிவலிங்கத்தை திருடி போலீசில் சிக்கி பரிதவிக்கிறார்கள். மீட்கப்பட்ட சிவலிங்கம் மீண்டும் அதே கோவிலில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: பூதாகரமாக வெடிக்கும் ஜெலன்ஸ்கியின் சொத்து மதிப்பு… அதிபராக மாறிய காமெடியன்..!