போலீஸ் கான்ஸ்டபிள்களின் மனநிலையை மதிப்பீடு செய்க- முதலமைச்சருக்கு பரிந்துரை!
தமிழகத்தில் உள்ள போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கு சம்பள உயர்வு வழங்கிடவும், குறைந்தபட்ச கல்வி தகுதியை உயர்த்திடவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 5வது போலீஸ் கமிஷனை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைத்திருந்தார். இந்த குழுவில், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி அலாவுதீன், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி கே. ராதாகிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றனர். மேலும், பிரபல மனநல நிபுணர் ராமசுப்ரமணியம், ஓய்வு பெற்ற பேராசிரியர் நளினி ராவ் உள்ளிட்டோரும் உறுப்பினர்களாக இடம் பெற்றனர். மூத்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் குமார் அகர்வால் இந்த குழுவின் உறுப்பினர் செயலாளராகவும் செயல்பட்டார்.
இந்த குழுவினர் பலகட்ட கருத்துக்கள், ஆலோசனைகளுக்கு பின்னர் தங்களது அறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் அண்மையில் அளித்திருந்தனர். அந்த பரிந்துரைகள் தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: 3 பெண்கள் மரண வழக்கில் திடீர் திருப்பம் : 'சித்தப்பாவே கொன்றதாக' சிறுவன் வாக்குமூலம்..!!
அதன்படி, போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கு ஊதியமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 ஆக நிர்ணயம் செய்யலாம் என்ற முக்கியமான பரிந்துரை இடம்பெற்றுள்ளது. மேலும், பல்வேறு சலுகைகளை தரலாம் என்றும் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது கான்ஸ்டபிள் பணிக்கான குறைந்தபட்ச கல்வி தகுதி 10ஆம் வகுப்பு என்பதை 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியை நிர்ணயிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு கொடுக்கப்படும் 20% என்பதை ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பாடம் பயின்றவர்களுக்கு அளிக்கலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது.
மேலும் பணியின்போது காவலர்களின் மனோநிலையை குறிப்பிட்டு பல பரிந்துரைகளை வழங்கி உள்ள குழுவினர், பணி அழுத்தம் காரணமாக காவலர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களையும் சுட்டிக்காட்டி உள்ளனர். எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் காவலர்களின் மனநிலையை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான குறிப்புகளை தொகுப்பாக மாவட்ட எஸ்.பி களுக்கு அளிக்கலாம் என்றும் அடுத்த கட்ட நடவடிக்கை தேவைப்படும் பட்சத்தில் உயர் அதிகாரிகளுக்கு முறையாக பகிரலாம் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், புகைப்பிடிப்போர், மதுபழக்கம் உள்ளவர்கள் யார் என்பதை கண்டறிந்து, அவர்களுக்கு மருத்துவ நிபுணர்கள் மூலமாக கவுன்சிலிங் அளிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போலீசார் முன்னிலையில் தற்கொலை மிரட்டல்.. சிறை கம்பிகளில் தலையை முட்டி வாலிபர் அட்ராசிட்டி..!!