அரசு கேபிள் டிவியில் அந்த மாதிரி படம்? ஷாக்கான பொதுமக்கள்.. 2 பேர் மீது வழக்குபதிந்து விசாரணை..!
தர்மபுரியில் ஒளிபரப்பாகும் தனியார் உள்ளூர் சேனல் ஒன்றில் மதிய வேளையில் ஆபாச படம் ஒளிபரப்பாகியது அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இது தொடர்பாக 2 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடக்கிறது.
ஆபாச படங்கள் மற்றும் விடியோ பார்ப்பது தவறான வழிகாட்டுதலாக அமைந்து விடும் என்பதால், Pornography என்னும் ஆபாச திரைப்படங்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. அதுமட்டும் அல்லாமல் வழக்கமாக திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கும் தணிக்கை குழு அமைத்து அந்த திரைப்படங்களும் தணிக்கை செய்யப்பட்ட பின்னரே வெளியாகின்றன். ஆபாச காட்சிகள் மட்டுமலாமல், புகை பிடிப்பது, மது அருந்துவது, தவறான வார்த்தைகளை உச்சரிப்பது, வன்முறை காட்சிகள் ஆகியவை தணிக்கை செய்யப்படும். சிறுவர்கள் முதல் அனைவரும் பார்க்கும் திரைப்படம் என்பதால் இத்தகைய தணிக்கை அவசியமாகிறது.
இதேபோல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கும் தணிக்கை உண்டு. இந்நிலையில் வீடுகள் தோறும் உள்ள அரசு கேபிள் டிவி நெட்வொர்க்கில் ஆபாச படம் திரையிடப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தருமபுரியில் தான் இத்தகைய சம்பவம் அரங்கேறியது. பிரபலமான தொலைக்காட்சி சேனல்கள் போல, ஓவ்வோரு மாவட்டத்திலும் சில உள்ளூர் சேனல்களும் அரசு அனுமதி பெற்று ஒளிபரப்பப்படுகின்றன. இதில் உள்ளூர் செய்திகள், உள்ளூர் விளம்பரங்கள் அதிகளவில் ஒளிபரப்பாகும்.
இதையும் படிங்க: தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டம்.. தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்தாதது ஏன்..?
உள்ளூர் மக்களை கவர அவ்வப்போது சிலர் இதில் புதிதாக வெளியான திரைப்படங்களை சட்டத்திற்கு புறம்பாக திரையிடுவதும், பின்னர் போலீசார் நடவடிக்கை எடுத்து சேனலை முடக்குவதும் நடப்பதுண்டு.அவ்வாறாக தர்மபுரியில் 15 தனியார் உள்ளூர் சேனல்கள் உள்ளன. அதில் தற்போது நான்கு சேனல்கள் இயங்கவில்லை என கூறப்படுகிறது. மீதமுள்ள 11 உள்ளூர் சேனல்களில் பாட்டு, விளம்பரங்கள், உள்ளூர் நிகழ்ச்சிகள், ஜோதிட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருவதுண்டு.
இவ்வாறு இயங்கி வந்த ஒரு தனியார் உள்ளூர் சேனலில் கடந்த 6-ம் தேதி மதியம் சுமார் ஒரு மணி அளவில், திடீரென ஆபாச படம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் சகிதமாக அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்த இல்லத்தரசிகள் இதனால் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சேனலை மாற்றினாலும் குழந்தைகள் முன்பு முகம் சுழிக்கும் படி ஆனது. எனவே இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை அளித்தனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தாசில்தாரும், துணை மேலாளருமான ராஜராஜன், தர்மபுரி மதுரை காவல்துறையில் புகார் மனு அளித்தார். புகாரின் பேரில் போலீசார் இதுகுறித்து விசாரித்த போது, சம்பவம் நடந்தது உண்மை என தெரியவந்தது. இந்த சம்பவத்தில் சேலம் பாரதிநகர் செலவடை பகுதியை சேர்ந்த சர்வேஷ், தருமபுரி உள்ளூர் சேனல் உரிமையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஈடுபட்டிருப்பதும் தெரிந்தது.
உடனடியாக அந்த டிவி சேனல் முடக்கப்பட்டு விட்டது. அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து, இவ்வாறான செயலில் ஈடுபட்ட சர்வேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்
இதையும் படிங்க: கொலை செய்துவிட்டு சாலை விபத்து என நாடகமாடிய தாய், மகன்.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!