பிரதமர் வருகை எதிரொலி.. மீனவர்கள் 3 நாட்கள் கடலுக்கு செல்லத் தடை.. ட்ரோன் பறக்கவிடவும் தடை..!
பிரதமர் நரேந்திர மோடி வருகை தருவதையொட்டி ராமேஸ்வரம் மீனவர்கள் வரும் 4-ந் தேதி தொடங்கி 6-ந் தேதி வரை மூன்று நாட்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று பாம்பன் பாலம். தமிழ்நாட்டையும், ராமேஸ்வரத்தையும் இணைக்கும் இந்த ரயில் பாலம் 2.2 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இந்தியாவின் முதலாவது கடற்பாலம் இதுவாகும். இலங்கை உடனான வர்த்தகத்தை அதிகரிக்க முடிவுசெய்த அப்போதைய ஆங்கிலேய அரசு 1914-ம் ஆண்டு இந்த கடற்பாலத்தை கட்டியது. 1964-ம் ஆண்டு தனுஷ்கோடியை உருக்குலையச் செய்த பெரும்புயலின்போது இந்த பாலம் சிறிது சேதமானது. பின்னர் பழுதுபார்க்கப்பட்டு தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தது. ஆனாலும் காலவெள்ளத்தில் உப்புக்காற்றால் இரும்புத்தூண்கள் பாதிக்கப்பட்டன.
இந்த கடற்பாலத்தின் மற்றொரு சிறப்பு.. கத்திரி வடிவ தூக்கு பாலம் ஆகும். அதாவது பாலத்தின் வழியாக கப்பல்கள் பயணிக்கும்போது பாலம் பிரிந்து வழிவிடுவதை பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரளுவர். 2013-ம் ஆண்டு பாலத்தின் மீது கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று மோதியது. இதில் தூண் ஒன்று சேதமடைந்தது. இதன்பின்னர் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாலத்தை அமைக்க 2020-ம் ஆண்டு மத்திய அரசு முடிவு செய்தது.
இதையும் படிங்க: புதிய பாம்பன் பாலத்துக்கு அப்துல் கலாம் பெயர் ஏன் வைக்கக் கூடாது.? மாஸ் ஐடியா கொடுத்த பிரேமலதா!!
நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த பாலத்தை வருகிற 6-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். இலங்கை செல்லும் பிரதமர் திரும்பும் வழியில் பால திறப்பு விழாவில் பங்கேற்கிறார்.
பிரதமர் வருகையையொட்டி ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் கடலுக்கு செல்ல 3 நாட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பாம்பன் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் ஏப்ரல் 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை வேறு இடத்தில் நிறுத்தி வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் வருகை வர உள்ளதால், ஒட்டுமொத்த ராமேஸ்வரம் பகுதியும் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது. 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. அன்றைய தினம் ராமேஸ்வரத்திற்கு வரும் மற்றும் செல்லும் வாகனங்கள் அனைத்தும் தணிக்கை செய்யப்பட உள்ளன. ஏப்ரல் 6-ந் தேதி ராமேஸ்வரத்தில் ட்ரோன் பறக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழக மீனவர்களுக்கு பாவம் செய்த திமுக, காங்கிரஸ்.. ஆளுநர் ஆர்.என். ரவி கடும் விமர்சனம்..!