கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதி..! கடனுக்கான வட்டிவீதம் தொடர்ந்து 2வது முறையாகக் குறைத்தது ரிசர்வ் வங்கி..!
குறுகியகாலக் கடனுக்கான வட்டிவீதத்தை தொடர்ந்து 2வது முறையாக 25 புள்ளிகள் குறைத்து ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.
2 மாதங்களுக்கு ஒருமுறை கூடும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் கூட்டம் இன்று கூடியது. இதில் ஒருமனதாக கடனுக்கான வட்டிவீதம், ரெப்போ ரேட்டை 6.25 சதவீதத்தில் இருந்து 6.00 சதவீதமாகக் குறைக்க முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்தார்.
இதன் மூலம் வீட்டுக்கடன், வாகனக் கடன், தொழிலுக்காக வாங்கிய கடன் ஆகியவற்றுக்கு செலுத்தும் மாதாந்திர இஎம்ஐ அளவு குறையும். ரிசர்வ் வங்கி அறிவிப்பை ஏற்று வங்கிகள் எந்த அளவுவட்டியைக் குறைக்கும் என்பது வரும்நாட்களில் தெரியும். கடைசியாக கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் நடந்த நிதிக்கொள்கைக் கூட்டத்தில் வட்டிவீதம் குறைக்கப்பட்டது, அதன்பின் கடந்த ஜனவரி மாதம் நடந்த நிதிக்கொள்கைக் கூட்டத்தில் 25 புள்ளிகள் குறைக்கப்பட்டநிலையில் தொடர்ந்து 2வது முறையாக வட்டி குறைக்கப்பட்டுள்ளது. கடந்த இரு முறையும் சேர்த்து 50 புள்ளிகள் குறைக்கப்பட்டது வீட்டுக்கடன், வாகனக் கடன் வாங்கியோர் இஎம்ஐ செலுத்துவோருக்கு பெரிய நிம்மதியைத் தரும்.
இதையும் படிங்க: கடன் தொல்லையால் விபரீதம்.. 2 பிள்ளைகளை கொன்று கணவன், மனைவி தற்கொலை.. சென்னையில் சோகம்..!
மத்திய பட்ஜெட்டில் வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்பட்டு நுகர்வோர் செலவிடுவதற்கு ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளநிலையில், தற்போது ரிசர்வ் வங்கியும் வட்டிவீதத்தைக் குறைத்துள்ளது. இதன் மூலம் கடன்பெறுவதும் இலகுவாக்கப்பட்டு, செலவிடுவதற்கும், முதலீடு செய்வதையும் ஊக்கப்படுத்தி பொருளாதார சுழற்ச்சியை வேகப்படுத்து ரிசர்வ் வங்கி ஊக்கப்படுத்தியுள்ளது.
பொருளாதரத்தில் பணப்புழக்கத்தை அதிகப்படுத்த கடந்த டிசம்பரில் நடந்த நிதிக்கொள்கைக் கூட்டத்தில் வங்கிகள் வைத்திருக்கும் ரொக்கக் கையிருப்பு வீதத்துக்கான வட்டியை 50 புள்ளிகள் வரை ரிசர்வ் வங்கி குறைத்து 4 சதவீதமாக மாற்றியது. இதன் மூலம் கடன் வழங்குவது அதிகரிக்கும், மக்கள் முதலீட்டில் ஆர்வம்காட்டுவார்கள் என்று நம்பப்பட்டது.
பொருளாதார வளர்ச்சி நடப்பு 2025-26 நிதியாண்டில் 6.5 சதவீதம் வரை இருக்கும் என 20 புள்ளிகளை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.5%, 2வது காலாண்டில் 6.7%, 3வது காலாண்டில் 6.6 சதவீதம், 4வது காலாண்டில் 6.3 பொருளாதார வளர்ச்சி இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. உணவுப் பணவீக்கம் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குறைந்திருந்தது. இது வரும் மாதங்களிலும் தொடரும் என நம்புவதால் பணவீக்கம் பெரிதாக வரும் மாதங்களில் உயராது, விலைவாசியிலும் பெரிதாக மாற்றம் இருக்காது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர வரி, உலக நாடுகளிடையே தொடரும் வரிப்போர், வர்த்தக முரண்பாடுகள் ஆகியவை உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அதிகமான வரிவிதிப்பு நாட்டின் ஏற்றுமதியிலும் பாதிப்பை ஏற்படுத்தும். வர்த்தகம் தொடர்பான சிக்கல்களை அமெரிக்க அதிகாரிகளுடன் கலந்து பேசி இந்தியா தீர்த்து வருகிறது. உலகப் பொருளாதார சூழல் நிலையற்றதாக இருந்தாலும் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படாது.
இவ்வாறு கவர்னர் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
இதையும் படிங்க: RBI-க்கு புதிய துணை ஆளுநர் நியமனம்... யார் இவர்?