குற்றவாளிக்கு தூக்கு..? பெண் டாக்டர் பலாத்கார கொலையில் அதிரடி அறிவிப்பு.. பின்னணியில் மிகப்பெரிய சதி.. பாஜக ஆவேசம்
பெண் டாக்டர் பாலியல் பலாத்கார கொலை: குற்றவாளிக்கு தூக்கு? தண்டனை விவரம் இன்று அறிவிப்பு: 'பெரிய அளவில் பின்னணி சதி' குறித்து விசாரிக்க பா.ஜ.க. வலியுறுத்தல்
நாட்டை உலுக்கிய இந்தக் கொலைக் குற்றவாளி சஞ்சய் ராய் போலீஸ் துறையில் தன்னார்வலராக பணிபுரிந்தவர். இந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று நேற்று தீர்ப்பு கூறிய கொல்கத்தா விசாரணை நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்படும் தண்டனை விவரம் குறித்து திங்கட்கிழமை (நாளை) அறிவிப்பதாக அறிவித்து உள்ளது.
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த பெண் டாக்டர் (வயது 31) கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
பெண் மருத்துவரின் கண்கள், உதடு, கழுத்து, வயிறு, தோள்பட்டை, விரல்கள், பிறப்பு உறுப்பில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன. இந்த கொடூர கொலை தொடர்பாக, காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: கேரள நர்ஸுக்கு ஏமனில் மரண தண்டனை... இந்திய அரசில் முயற்சி பலனளிக்குமா..?
சிபிஐ க்கு மாற்றம்
நாட்டை உலுக்கிய பெண் மருத்துவரின் கொடூர கொலைக்கு நீதி கோரி மேற்குவங்கம் முழுவதும் மருத்துவர்கள், மருத்துவ கல்லூரி மாணவ, மாணவியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தினர். இதன்பிறகு உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையின்படி மருத்துவர்களின் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது.
பெண் மருத்துவர் கொலை வழக்கை முதலில் மேற்குவங்க போலீஸார் விசாரித்தனர். மாநில போலீஸாரின் விசாரணை குறித்து மருத்துவ மாணவர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து மேற்குவங்க உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி பெண் மருத்துவர் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை
மருத்துவ மாணவர்கள் சுமார் 50 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தை நடத்தினர். இதன்காரணமாக ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனை தலைவர் சந்தீப் கோஷ் பதவி விலகினார். அவர் மீதும் அவரோடு தொடர்புடையவர்கள் மீதும் ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மருத்துவ கல்லூரி நிர்வாகிகள், காவல் துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். முதல்வர் மம்தா பானர்ஜி பலமுறை மருத்துவ மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கூட்டு பாலியல் பலாத்காரம்
இந்த சூழலில் பெண் மருத்துவர் கொலை வழக்கு மீதான விசாரணை கொல்கத்தாவில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. வழக்கில் 81 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 50 பேரிடம் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
கடந்த அக்டோபர் 7-ம் தேதி சிபிஐ தரப்பில் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடு செய்யப்பட்டிருப்பதாக மருத்துவ மாணவர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் சிபிஐ குற்றப்பத்திரிகையில் சஞ்சய் ராய் மட்டுமே குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
தூக்கு தண்டனை?
கடந்த 9-ம் தேதி அனைத்து தரப்பு விசாரணைகளும் நிறைவடைந்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி அனிபர் தாஸ் நேற்று தீர்ப்பு கூறினார். வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தார். அவருக்கான தண்டனை விவரம் நாளை வெளியிடப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.
இதுகுறித்து சட்ட நிபுணர்கள் கூறும்போது, “பாரதிய நியாய சன்கிதா சட்டப்பிரிவு 64 (கற்பழிப்பு ) 66 மற்றும் 103 (1 ) - ன் கீழ் சஞ்சய் ராய்குற்றவாளி. இந்த சட்டப்பிரிவுகளின் படி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை அல்லது தூக்கு தண்டனை விதிக்கப்படலாம்" என்று தெரிவித்தனர்.
சஞ்சய் ராயின் உறவினர்கள் கூறும்போது, “விசாரணை நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யமாட்டோம். நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கினாலும் ஏற்றுக் கொள்வோம்" என்று தெரிவித்தனர்.
கதறி அழுத குற்றவாளி
பெண் மருத்துவர் கொலை வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டதும் அவர் கதறி அழுதார். அப்போது நீதிபதிகளிடம் சஞ்சய் ராய் கூறும்போது, "நான் ருத்ராட்ச மாலை அணிந்துள்ளேன். நான் பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்டிருந்தால் எனது ருத்ராட்ச மாலை அறுந்து விழுந்திருக்கும். நான் எந்த குற்றமும் செய்யவில்லை. நான் ஏழை குடும்பத்தை சேர்ந்தவன். என்னை வழக்கில் சிக்க வைத்துள்ளனர்" என்று கதறி அழுதபடி தெரிவித்தார்
அப்போது நீதிபதி அனிபர் தாஸ் குறுக்கிட்டு, "சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை, சாட்சிகள், ஆதாரங்களின் அடிப்படையில் நீங்கள் (சஞ்சய் ராய்) குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. உங்கள் தரப்பு வாதத்தை திங்கள்கிழமை நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம்"என்றார்.
அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் - பெற்றோர்
கொல்கத்தா பெண் மருத்துவரின் தந்தை கூறியதாவது: -
"என்னைப் பொறுத்தவரை முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்குவங்க போலீஸார், சிபிஐ விசாரணை திருப்திகரமாக இல்லை. விசாரணை நீதிபதியின் தீர்ப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். தற்போது பிரதான குற்றவாளி மட்டுமே தண்டிக்கப்பட்டு உள்ளார்.
எனது மகளின் கொலையோடு தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அதுவரை நீதிமன்றத்தின் கதவுகளை தட்டிக் கொண்டே இருப்பேன். எனக்கும் எனது குடும்பத்துக்கும் பொதுமக்களே ஆதரவு அளிக்க வேண்டும், பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு பெண் மருத்துவரின் தந்தை தெரிவித்தார்.
பின்னணியில் பெரிய சதி: விசாரிக்க பாஜக வலியுறுத்தல்
இதற்கிடையில் இந்த கொடூர கொலையில் பின்னணியில் உள்ள மிகப்பெரிய சதி பற்றி தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி கூறியிருக்கிறார்.
பொதுவில் தீர்ப்பை வரவேற்ப்பதாக கூறிய அவர், "ஆனால் இந்த மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் ஆகியோரும் இன்று தண்டிக்கப்பட்டு இருந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்து இருப்போம்.
பெற்றோர் மற்றும் ஜூனியர் டாக்டர்கள் முன்வைத்த பெரிய சதி குற்றச்சாட்டுகள் கவனிக்கப்பட வேண்டும். இந்த குற்றத்தில் வேறு யாரும் ஈடுபட்டர்களா இல்லையா என்பதை பார்க்க வேண்டும்" என்று பி டி ஐ செய்தியாளரிடம் கூறினார்.
இதையும் படிங்க: 15 நகரங்கள்... 35 தனிப்படைகள்... சைஃப் அலி கானை தாக்கிய முகமது ஷெரீப் சிக்கியது எப்படி..?