×
 

பிஜேபி பக்கம் சாயும் சசிதரூர்..! மோடியை தொடர்ந்து ஆளுநருக்கு பாராட்டு..!

கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை புகழ்ந்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர்.

காங்கிரஸ் செயற்குழு உறுப்பினரும், திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான சசிதரூர், கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை பெரிதும் புகழ்ந்து பேசினார். புது தில்லியில் மாநிலத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இரவு உணவு விருந்து மற்றும் விவாதத்திற்கு அழைத்த ஆளுநரின் செயலை அவர் பாராட்டினார். 

தனது X பக்கத்தில், “கேரள ஆளுநர் ராஜேந்திர ஆர்லேகர், மாநில பிரச்சனைகள் மற்றும் கூட்டு நடவடிக்கை தேவை குறித்து நேற்று (செவ்வாய்) அனைத்து கேரள நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இரவு உணவு விருந்து மற்றும் விவாதத்திற்கு அழைத்த விஷயத்தை பெரிதும் பாராட்டுகிறேன்,” என்று சசிதரூர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: ஆளுநரோடு கைகோர்த்த பினராயி விஜயன்..! மத்திய அரசுக்கு நேரடி செக்..!

முதலமைச்சர் பினராயி விஜயனும் இதில் கலந்துகொண்டு சுருக்கமாக பேசியதாக அவர் கூறினார். “இந்த அசாதாரண செயல்பாடு, அரசியல் வேறுபாடுகளை கடந்து மாநிலத்தை மேம்படுத்துவதற்கான நமது ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு நல்ல அறிகுறியாக உள்ளது,” என்று அவர் பதிவிட்டார்.

ஒரு ஆளுநர் முதன்முறையாக மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இவ்வாறு விவாதம் நடத்துவது பாராட்டுக்குரியது என்றாலும், பொதுவாக எதிர்க்கட்சிகள் அல்லது மத்திய நியமன அதிகாரிகளின் முயற்சிகளை எதிர்க்கட்சியான காங்கிரஸ் பாராட்டுவதில்லை. ஆனால், சசிதரூர் சமீப காலமாக தனது கட்சியின் எதிரிகளையும் புகழ்ந்து அரசியல் புயலை கிளப்பி வருகிறார்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடனான சந்திப்பை, “பிரதமரும் ட்ரம்பும் வெளியிட்ட அறிக்கைகள் ஊக்கமளிக்கின்றன. நமது பெரிய கவலைகள் தீர்க்கப்பட்டுள்ளன, என பாராட்டினார். 

F-35 ஸ்டெல்த் விமான விற்பனை உறுதியை “மிகவும் மதிப்புமிக்கது” என குறிப்பிட்டார். ஆனால் சசிதரூரின் இந்த பிஜேபி மற்றும் தலைவர்களுடைய புகழ்ச்சியை கடுமையாக விமர்சனம் செய்தார் காங்கிரஸ் தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா. மேலும் எலான் மஸ்க் ‘குப்பை’ என விமர்சித்த F-35-ஐ மோடி ஏன் வாங்க விரும்புகிறார்?” என அதிக விலை மற்றும் இயக்க செலவை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தார். 

கட்சியுடனான உறவு குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த சசிதரூர், “நான் கட்சி பேச்சாளர் இல்லை. திருவனந்தபுரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்; இந்திய ஜனநாயகத்தில் பொறுப்புள்ள பிரதிநிதியாக பேசுகிறேன் என்றார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு சசிதரூர் அளித்த பேட்டியில் “நாட்டின் நலனுக்காக பயமின்றி கருத்து சொல்கிறேன். குறுகிய அரசியல் சிந்தனை எனக்கு இல்லை. பொதுமக்களிடம் எதிர்மறை எதிர்வினை இல்லை, ஆனால் கட்சியில், ‘எதிரிகளை ஏன் பாராட்டுகிறாய்?’ என கேட்கிறார்கள். நல்லதை பாராட்ட வேண்டும் கெட்டதை விமர்சிக்க வேண்டும் என சசிதரூர் தனது பேட்டியில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும், கட்சி நிலைப்பாட்டிற்கு எதிராக பேசும் சசி தரூரின் பாங்கு, கேரள அரசியல் களத்தை 2026 தேர்தலுக்கு முன் புரட்டிப்போடலாம், கேரள அரசியல் களத்தில்  பெரிய விளைவுகளை கூட ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

இதையும் படிங்க: டயட்டால் பறிப்போன உயிர்..! யூடியூப்-ஆல் நேர்ந்த விபரீதம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share