தொடரும் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்... சிக்கினால் ஆசிரியர் வேலை காலி...அனைத்து படிப்பும் ரத்து...அரசாணை வெளியானது
தமிழகத்தில் அதிகரித்து வரும் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க அரசாணை வெளியாகியுள்ளது. குற்றச்செயலில் ஈடுபட்டு சிக்கினால் தண்டனை, பணியிலிருந்து டிஸ்மிஸ், படித்த படிப்புகள் ரத்தாகும், சான்றிதழ் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை.
தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் ஓவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒரு பெண் குழந்தை மீது பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்படுவதாக தெரிகிறது. தமிழகத்தில் மகளிருக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.
இந்தியா முழுவதும் கடந்த 2022 ஆம் ஆண்டில் நிகழ்ந்த குற்றங்களின் தொகுப்பு அறிக்கையை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கிறது. அதில் தான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. 2022ஆம் ஆண்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் தொடர்பாக 4415 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2022 ஆம் ஆண்டில் 4906 வழக்குகளாக அதிகரித்திருக்கிறது. அதேபோல், பாலியல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 5026 ஆக அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளில் 3621 பேர் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். 1008 பெண் குழந்தைகள் மானபங்கம் செய்யப்பட்டுள்ளனர். 367 சிறுமிகள் பாலியல் சார்ந்த தொடர் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான ஒட்டுமொத்த குற்றங்களின் எண்ணிக்கையும் 2021ஆம் ஆண்டின் எண்ணிக்கையான 8501-லிருந்து 9207 ஆக அதிகரித்துள்ளது. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 11.12% அளவுக்கும், பெண்களுக்கு எதிரான ஒட்டுமொத்த குற்றங்களின் எண்ணிக்கை 8.31% அளவுக்கும் அதிகரித்துள்ளன என கடந்த ஆண்டு அன்புமணி ராமதாஸ் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: 4ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில் திடீர் திருப்பம்... அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்...!
அதற்கு சற்றும் குறைந்ததில்லை 2023-24 ஆண்டுகள் என்கிற அளவில் குற்ற எண்ணிக்கை கூடி வரும் நிலையில், 2025 ஆம் ஆண்டு பிறந்ததிலிருந்தே அண்ணா பல்கலைக்கழக மாணவி, அடுத்து தொடர்ந்து வருகிறது. 2025 பிறந்து கடந்த 36 நாட்களில் தமிழகம் முழுவதும் 95 பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சி அதிமுக குற்றம் சாட்டுகிறது.
”*மணப்பாறையில் உள்ள பள்ளியில் 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை.
*கோவை மேட்டுப்பாளையத்தில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.
*கிருஷ்ணகிரியில் அரசுப்பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.
*ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை.
*சேலம் ஓமலூர் அருகே 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை.
*கிளாம்பாக்கம் அருகே ஆட்டோவில் மாணவிக்கு பாலியல் தொல்லை.
*கோவை அருகே 78 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை.
*காரமடை அருகே ஆட்டோவில் மாணவிக்கு பாலியல் தொல்லை.
*திமுக ஆட்சியில் சிறுமி முதல் மூதாட்டி வரை என பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறியதா தமிழ்நாடு?” என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
”பெண்கள் பாதுகாப்பாகவும், அச்சமின்றியும் வாழ்வதை எந்த மாநிலம் உறுதி செய்கிறதோ, அந்த மாநிலம் தான் நல்லாட்சி நடத்தும் மாநிலம் ஆகும். ஆனால், தமிழ்நாடு அந்தப் பெருமையைப் பெறுவதற்கு தவறி விட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்கள் என்ற அவப்பெயரைப் பெற்றிருந்த பிகார், ராஜஸ்தான், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் கூட பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறைந்து விட்டன. அந்த மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இரு மடங்குக்கும் அதிகமாக நிகழ்கின்றன.
இந்தியாவின் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உத்தரப்பிரதேசம், மராட்டியம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக பெண் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான நான்காவது மாநிலம் என்ற அவப்பெயரை தமிழகம் பெற்றிருக்கிறது. இதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்”. என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பல்வேறு எதிர்க்கட்சிகளும் இதுபோன்ற பாதுகாப்பற்ற தன்மையை கண்டித்து குரலெழுப்பியுள்ளன.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்ததற்கான முதன்மைக் காரணம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கான இயற்றப்பட்ட சட்டங்களின்படி என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமோ, அவை எதுவுமே செய்யப்படாதது தான். அடுத்ததாக, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால், உடனடியாக கைது செய்யப்படுவோம், வழக்கு விசாரணை விரைவாக நடத்தப்பட்டு தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் குற்றவாளிகளுக்கு இல்லாதது தான். அரசு மற்றும் காவல்துறையில் செயலற்ற தன்மை தான் இவற்றுக்கு காரணமாகும் என்ற குற்றச்சாட்டும் எதிர்க்கட்சிகளால் வைக்கப்படுகிறது.
இதி கொடுமையான விஷயம் தாய், தந்தை, தெய்வத்துக்கு இணையாக மதிக்கப்படும் ஆசிரியர்களே தந்நிலை மறந்து பிஞ்சு குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததுதான். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை இந்த விவகாரத்தில் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. பள்ளி ஆசிரியர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டால் தண்டனை மட்டுமல்ல, உடனடியாக பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை செய்துள்ளது. அவை ஏற்கப்ப்ட்டு அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது.
”பள்ளி மாணாக்கர்களுக்கு முன்னுதாரணமாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட வேண்டிய ஆசிரியர்களில் சிலர் பள்ளிகளில் பயிலும் சிறு குழந்தைகள் உட்பட மாணவ மாணவிகளிடம் ஒழுக்கக் கேடான முறையில் நடந்து கொள்வது குறித்தும், அதனால் மாணவர் சமுதாயம், குறிப்பாக பெண் குழந்தைகள் மோசமாகப் பாதிக்கப்படுவது குறித்தும் நாளிதழ்கள் மற்றும் மின்னனு ஊடகங்களிலும் சமீப காலங்களில் செய்திகள் அதிக அளவில் வெளிவருவதை பள்ளிக் கல்வி இயக்குநர் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
இத்தகைய அவலநிலையை உடனடியாகக் களையவும், மாணவ சமுதாயம் ஆரோக்கியமான சூழ்நிலையில் உருவாகுவதற்கும், ஆசிரியர்கள் பள்ளி மாணவ, மாணவிகளிடம் மிகுந்த அக்கறையுடனும், கடமை உணர்ச்சியுடனும் ஆசிரியர் பணி செய்யவும், பள்ளிக் குழந்தைகள் மற்றும் மாணவ மாணவிகளிடம் ஆசிரியர்கள் தவறான முறையில் நடந்து கொள்ளும் நிலையை முற்றிலும் தவிர்ப்பதற்கும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள மேலே படிக்கப்பட்ட கடிதத்தில் பள்ளிக் கல்வி இயக்குநர்அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.
ஆழ்ந்த பரிசீலனைக்குப் பின்னர் பள்ளிக் கல்வி இயக்குநரின் பரிந்துரையை ஏற்று அரசு கீழ்க்கண்டவாறு ஆணையிடுகிறது
1. தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு கடும் தண்டனையான கட்டாய ஓய்வு பணி நீக்கம் போன்ற தண்டனை வழங்கப்படும். (அரசுப் பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதி 19 (2) இதற்குப் பொருந்தும். இவ்விதியை மீறுபவர்களுக்கு மேற்குறிப்பிட்ட தண்டனைகளுள் ஒன்று வழங்கப்பட வேண்டுமென தமிழ்நாடு குடிமைப் பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி 8-ல் கூறப்பட்டுள்ளது.
2. சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச் சான்றுகள் அனைத்தையும் ரத்து செய்ய சார்ந்த துறை மூலம் நடவடிக்கை எடுத்து கல்விச் சான்றுகளை ரத்து செய்யப்படும்.
3. பள்ளிக் குழந்தைகளும், மாணவ மாணவிகளும் பிற நபர்களின் தவறான நடவடிக்கைளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட வேண்டும்.
4. ஆசிரியர்கள் தவறான செயல்களில் ஈடுபடாவண்ணம் தகுந்த உளவியல் ஆலோசகர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கப்படவேண்டும்.
5. பள்ளி மாணவ மாணவிகளின் மனநிலை பாதிக்கும் பிரச்சினைகளை களைவதற்கான உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கென பள்ளிக் கல்வித் துறை மூலம் உளவியல் ஆலோசகர், உதவியாளர், மற்றும் அனைத்துவகை வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தி, இதன்மூலம் மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வும், ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்படவேண்டும்”.
இவ்வாறு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவிகள் புகார்களை தெரிவிக்க ஒவ்வொரு பள்ளியிலும் புகார் பெட்டி வைக்கப்படவேண்டும் அதை மாவட்ட கல்வி அதிகாரி மட்டுமே பார்த்து நடவடிக்கை எடுக்க வழி செய்யவேண்டும் எனது குழந்தைகள் நல நிபுணர்களின் கோரிக்கையாக உள்ளது.
பெண் குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே தவறான தொடுதல், சரியான தொடுதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதேபோல் பெற்றோர் தங்கள்கு ழந்தைகள் குறைகளை சொல்ல வந்தால் காதுகொடுத்து கேட்கும் மன நிலையில் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் குழந்தைகள் தங்களுக்கு நேர்வதை சொல்ல தயங்கும், இது குற்றவாளிகளுக்கு சாதகமாக அமையும், என உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணிற்கு பாலியல் தொல்லை ... கீழே தள்ளிவிட்டு தப்பிய இருவருக்கு வலைவீச்சு ...!