ஸ்டாலின் அரசியல் புரியவில்லை… நயினார் நாகேந்திரன் வெட்கப்பட வேண்டாமா?: ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!
இந்த அரசியல் எல்லாம், நயினார் நாகேந்திரனுக்கு புரியவில்லை என்றால் அண்ணா திமுக என்ற திராவிடக் கட்சியில் இருந்தார் என்பதற்காக, அவர் வெட்கப்பட வேண்டாமா?
''மு.க.ஸ்டாலின் அரசியல் எல்லாம், நயினார் நாகேந்திரனுக்கு புரியவில்லை என்றால் அதிமுக என்ற திராவிடக் கட்சியில் இருந்தார் என்பதற்காக, அவர் வெட்கப்பட வேண்டாமா? என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரம் வழங்குவது நாட்டை பலவீனம் ஆக்கிவிடும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர், ''பேரறிஞர் அண்ணா உருவாக்கிய மாநில சுயாட்சி என்கிற கருவிற்கு கலைஞர் உருவம் கொடுத்தார். அந்த உருவத்திற்கு தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல் வடிவம் கொடுத்து வருகிறார். இந்த அரசியல் எல்லாம், நயினார் நாகேந்திரனுக்கு புரியவில்லை என்றால் அண்ணா திமுக என்ற திராவிடக் கட்சியில் இருந்தார் என்பதற்காக, அவர் வெட்கப்பட வேண்டாமா?
இதையும் படிங்க: சீமானுக்கு டாடா... பாஜகவுக்கு தாவும் சாட்டை துரைமுருகன்? - தம்பிகள் கதறல்..!
மாநில நலன் மற்றும் மாநில சுயாட்சி சார்ந்து திமுக போராடியபோதெல்லாம் அண்ணா காலத்தில் இருந்தே "பிரிவினைவாதம் பேசுகிறது திமுக" என அவதூறு பரப்பினார்கள். இப்போது அதே அவதூறை மோடி அமித்ஷாவின் தமிழ்நாட்டு புதிய ஏஜெண்ட் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். "மாநிலங்களை பிரிக்க வேண்டும் என பிரிவினைவாதத்தை முதல்வர் தூண்டுகிறார்" என நயினார் நாகேந்திரன் பேசியதில் இருந்தே அதிமுகவில் இருந்த அவருக்கு அண்ணாவின் அடிப்படை சித்தாந்தம் கூட தெரியாத ரசிக மனநிலையில் இருந்திருப்பதை காட்டுகிறது.
மாநிலங்கள் அனைத்து அதிகாரங்களையும் கொண்டவையாக விளங்கினால்தான் மாநிலங்கள் வளர்ச்சி அடையும். இந்தியாவும் வலிமை பெறும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதை கேட்டிருந்தாலே அவரின் நல்ல நோக்கம் புரிந்திருக்கும். டெல்லி எஜமானர்கள் கோபித்துக்கொண்டால் பதவிக்கு ஆபத்து நேருமோ? என்ற பதற்றத்தில் அவசரமாக பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துவிட்டு, அவதூறு கருத்தை ஊடகங்கள் மூலம் நயினார் நாகேந்திரன் பரப்பி இருப்பது கண்டிக்கத்தக்கது.
இந்தியா என்பது முழு உடல், அதன் உறுப்புகள் தான் மாநிலங்கள் என்பதையே அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்துகள் சொல்கின்றன. மாநிலங்களுக்கான பலம் என்பது இந்தியாவிற்கான பலம். அதாவது மாநிலங்கள் பலம் பெற்றால் தான் இந்தியா வலுப்பெறும். நமது உடலில் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கினால் தான், முழு உடலும் வலுப்பெறும் என்ற அடிப்படைக் கூட தெரியாதவராக நயினார் நாகேந்திரன் இருப்பதை பார்த்தாலே திராவிடக் கட்சியில் இருந்து அதற்கு நேரெதிர் கொள்கை கொண்ட ஆரிய கட்சிக்கு சென்றதற்கான காரணம் விளங்கும்.
உடலில் உள்ள உறுப்புகள் பலம் பெறுவது, முழு உடலை வலிமையற்றதாக்கி விடுமா? என்பது போல மாநில உரிமைகளை திமுக கோருவது இந்திய நாட்டை வலிமையற்றதாக மாற்றிவிடுமா? என்பதற்கு நயினார் நாகேந்திரன் பதில் சொல்ல வேண்டும்'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: வேலூர் கிராமத்தில் வெடிக்கும் வக்பு சொத்து சர்ச்சை.. கொதிக்கும் மக்கள்.. விசாரிக்கும் அரசு.. பாஜகவின் வார்னிங்!