மருதமலையில் நாளை கும்பாபிஷேகம்.. இன்று வேல் மாயம்.. பக்தர் வேடத்தில் வந்த திருடன்..!
7ஆம் படை வீடாக கருதப்படும் மருதமலையில் நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் வெள்ளி வேல் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முருகப்பெருமானின் 7வது படைவீடு என பக்தர்களால் போற்றப்படும் மருதமலை முருகன் கோயிலில் 12 ஆண்டுகள் கழித்து நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்திற்கான விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. கோயிலில் பிரம்மாண்ட யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகளும் நடந்து வருகின்றன. கோபுரங்களில் புதிய கலசங்கள் பொருத்துதல் உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. கோவில் முழுவதும் மின் அலங்காரம் செய்யப்பட்டு கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது.
நேற்று மாலை 3-ம் கால வேள்வி பூஜை நடந்தது. இன்று காலை 9 மணிக்கு 4-ம் கால வேள்வி பூஜை நடத்தப்பட்டது. மாலை 4.30 மணிக்கு 5-ம் கால வேள்வி பூஜை நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நாளை (4-ந் தேதி) காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் நடக்கிறது. முன்னதாக நாளை அதிகாலை 4.30 மணிக்கு 6-ம் கால வேள்வி பூஜை நடக்கிறது.
காலை 6 மணி முதல் 6.45 மணிக்குள் திருச்சுற்று தெய்வங்களுக்கு, பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், காலை 7.30 மணிக்கு யாக சாலையில் இருந்து மூலவருக்கு திருக்குடங்கள் ஏந்தி கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி, காலை 8.30 மணிக்கு மருதாசலமூர்த்தி கோபுர விமானம், ஆதி மூலவர் கோபுர விமானம், ராஜகோபுரம், கொடிமரம், பரிவார கோபுர விமானங்களுக்கு கும்பாபிஷேகம், 9 மணிக்கு ஆதிமூலவர், விநாயகர், மருதாசலமூர்த்தி, பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, வீரபாகு, கரிவரதராஜ பெருமாள், சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு கும்பா பிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மூலவருக்கு பேரொளி வழிபாடு நடக்கிறது.
இதையும் படிங்க: மருதமலை முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு.. நீதிமன்றத்தில் உறுதி அளித்த தமிழக அரசு..!
டிரோன் உதவியுடன் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காணும் வகையில் பெரிய எல்.இ.டி. திரைகளும் அமைக்கப்பட்டு உள்ளது. கும்பாபிஷேகத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். படிப்பாதை வழியாக வரும் பக்தர்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில் வழிதோறும் பச்சைப்பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவை-மருதமலை சாலையில் நாளை முதல் 6-ந் தேதி வரை 4 நாட்கள் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு உள்ளது. பக்தர்கள் வாகனங்களை நிறுத்த பாரதியார் பல்கலைக்கழகம் உள்பட பல இடங்களில் வாகன நிறுத்த வசதியும் செய்யப்பட்டு உள்ளது. கோயிலை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் மருதமலை அடிவாரத்தில் வேல் கோட்டம் தியான மண்டபம் உள்ளது. இதில் முருகனை வேல் ரூபத்தில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதில் மூலவருக்கு முன்பாக சுமார் 2 1/2 அடி வெள்ளியால் செய்யப்பட்ட, சுமார் 4 லட்சம் மதிப்பிலான வேல் உள்ளது.
இதனை நேற்று பிற்பகல் சுமார் 12 மணி அளவில் சாமியார் வேடத்தில் வந்த திருடன் எடுத்துச் செல்லும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி வேல் கொள்ளை போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றிய வடவள்ளி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மருதமலை முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு.. இந்துசமய அறநிலையத்துறை திட்டவட்டம்..!