×
 

படபடவென வெடித்து சிதறிய பட்டாசு.. உடல்கருகி இறந்த தொழிலாளர்கள்.. சிவகாசியில் மீண்டும் சோகம்..!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் உராய்வு காரணமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உடல்கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 3 பேர் ஐசியூவில் அட்மிட் செய்யப்பட்டு உள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் அதிகமாக செயல்பட்டு வருகின்றன. இந்த மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக பட்டாசுகள் தயாரிப்பது, தீப்பெட்டிகள் தயாரிப்பது உள்ளது. இதனால், சிவகாசியை குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படுவது வழக்கம். தற்போது கோடை காலம் என்பதால் விபத்துக்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தொழிலாளர் கவனமுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 3 பேர் உடல்கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி பகுதியில் ராஜரத்தினம் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் லைசென்ஸ் பெற்ற தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு தயாரிப்பு அறைகள் உள்ளன. இதில் இன்று 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டனர். அப்போது மருந்து கலவையில் உராய்வு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக  பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. 

இதில் சம்பவ இடத்திலேயே மூன்று தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு சிவகாசி தீயணைப்பு துறையினர் வந்து தீயை கட்டுப்படுத்தினர்.

மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையிலான போலிசார் மீட்டுப்பணிகளை துரிதப்படுத்தினர்.மேலும் வருவாய்த்துறை மற்றும் மத்திய பெட்ரோலியம் வெடிபொருள்  கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் வெடிவிபத்திற்கான காரணத்தை ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சுழன்று சுற்றும் சுனாமி ராட்டினம்.. அந்தரத்தில் பறந்து விழுந்த பெண்.. வினையான விளையாட்டு..!

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் ரசாயன கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக பட்டாசுகள் வெடித்து சிதறியது தெரிய வந்தது. மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. சிவகாசியில் அடிக்கடி பட்டாசு ஆலை வெடி விபத்து நிகழ்ந்து வருவதால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்து முறையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான அனைத்து கல்வி செலவுகளையும் தமிழக அரசு ஏற்கும். இதற்காக விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் கீழ் தனி நிதியம் ஏற்படுத்தி, அதற்கு முதல் கட்டமாக ரூ.5 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்துள்ளார். எனினும் பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி உயிர் இழப்பவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 26 ரஃபேல் விமானம் கொள்முதல்.. இந்தியா-பிரான்ஸ் இடையே ரூ.63,000 கோடி ஒப்பந்தம் கையொப்பமாகிறது..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share