14 கோடி மக்கள் தவிப்பு! மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைவாக நடத்துங்கள்: சோனியா காந்தி வேண்டுகோள்
மத்திய அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் 14 கோடி மக்கள் உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பலன் கிடைக்காமல் தவிக்கிறார்கள், ஆதலால் விரைவாக மத்திய அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:
2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயனாளிகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர், சமீபத்தில் கணக்கெடுப்பின்படி இல்லை. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்பது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2013ம் ஆண்டு 140 கோடிமக்களின் நலனுக்காக கொண்டு வந்த மாபெரும் திட்டம்.
நாட்டில் கோடிக்கணக்கணக்கான மக்கள் பசியில்லாமல் தூங்க வேண்டும், பசியிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. கொரோனா தொற்று காலத்தில் இந்த சட்டத்தின் தேவை புரிந்திருக்கும். 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் இப்போதுவரை உணவுப்பாதுகாப்புச் சட்டத்தின் பயனாளிகள் கணக்கெடுக்கப்படுகின்றனர்.
இதையும் படிங்க: சோனியா காந்தி மீது பீகார் நீதிமன்றத்தில் வழக்கு: குடியரசுத் தலைவர் குறித்த பேச்சால் சிக்கல்
ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முந்தைய முறைதான் பின்பற்றப்படுகிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் படி ஒருவருக்கு மாதம் 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக மாதம்தோறும் வழங்கப்படுகிறது. இந்திய சுதந்திர வரலாற்றிலேயே மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அதன் காலம் முடிந்தபின்பும் 4 ஆண்டுகளாக எடுக்கப்படாமல் இருப்பது இதுதான் முதல்முறையாகும். மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்பது தெரியாமல் தெளிவற்ற நிலைதான் இருக்கிறது.
ஆனால் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்கள்படி பார்த்தால், இந்த ஆண்டும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடக்காது போல் தெரிகிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தாததால் 14 கோடி மக்கள் உணவுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பலன்களைப் பெற முடியாமல் தவிக்றார்கள்.
விரைவாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த மத்திய அ ரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும், தகுதியுள்ள அனைவரும் உணவுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பலன்களைப் பெற வேண்டும். உணவுப் பாதுகாப்பு சட்டம் என்பது சலுகை இல்லை, அது அடிப்படை உரிமை
இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரூ.15 லட்சம் கொடுத்து மனைவிக்கு ரயில்வேயில் வேலை.. விவாகரத்தால் வெளிவந்த ஊழல்.. பழி தீர்த்த கணவர்..!