×
 

கல்வியில் வரலாற்று சாதனை படைத்த 'சூப்பர் மம்மி'; 43 வயதில், "பிஎச்டி" டாக்டர் பட்டம் பெறும் 19 குழந்தைகளின் தாய்!

கற்றது கைமண் அளவு; கல்லாதது உலகளவு என்பார்கள்.

வாழ்நாள் முழுவதும் கல்வி கற்பது அவசியம் என அறிஞர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.  ஆனால், பழமையான சம்பிரதாயம் மற்றும் கட்டுப்பாடுகள் நிறைந்த சவுதி அரேபியா நாட்டில், 19 குழந்தைகளுக்கு தாயான ஒருவர், இளங்கலை, முதுகலை மற்றும் "பிஎச்டி" படித்து முனைவர் (டாக்டர்) பட்டம் பெற இருக்கிறார் என்றால், நிச்சயம் அவரை நாம் பாராட்டியே ஆக வேண்டும். 

இந்த வரலாற்று சாதனை படைக்கும் அந்தக் 'கல்வித் தாயி'ன் பெயர், ஹம்தா அல் ருவைலி. 43 வயதான அவருக்கு 10 ஆண் குழந்தைகளும் 9 பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள். 

இருப்பினும், எந்தவித தயக்கமும் இன்றி குழந்தை வளர்ப்பிலும் அதிக அளவில் அக்கறை செலுத்திக்கொண்டு, கல்வி கற்கும் பணியிலும் மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார், துணிச்சல் மிக்க இந்த பெண்மணி. 

இதையும் படிங்க: பெண் மருத்துவர்கள் பற்றாக்குறையால் மாதவிடாய் பற்றி ஆலோசிப்பதை தவிர்க்கும் 90% பெண்கள் : ஆய்வில் தகவல்...

" எந்த ஒரு சூழ்நிலையிலும் நான் குழப்பம் அடைவதில்லை; ஒவ்வொரு நாளையும் கவனமாக திட்டமிட்டு செயலாற்றி வருகிறேன்"  என்று'அல் எக்பரியா' என்ற டிவி நிகழ்ச்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தெளிவாக அவர் கூறியிருக்கிறார்.

" இத்தனை சிரமங்களுக்கு இடையிலும் உளவியல் சுகாதார பிரிவில் வேலை பார்த்து வரும் அவர் 'இ காமர்ஸ்' பயிற்சி வகுப்பு களிலும் பங்கேற்று வருகிறார்.

" என்னைப் பொறுத்தவரை ஒரு குழந்தையை வளர்ப்பது என்றாலும், பத்து குழந்தைகளை வளர்ப்பது என்றாலும் அதில் எந்தவித வித்தியாசமும் இல்லை. பொறுப்பான அணுகு முறையை நாம் கடைப்பிடித்தாலே போதும்" என்று மற்றொரு கேள்விக்கு அவர் பதில் அளித்தார். 

அதே நேரத்தில், " ஒரு வகுப்பறையில் 100 குழந்தைகளை சமாளித்து பாடம் நடத்தும் ஆசிரியர் மற்றும், ஏராளமான படை வீரர்களை வழிநடத்தும் ராணுவ அதிகாரி ஆகியோரை குழந்தை வளர்ப்பில் நான் முன் உதாரணமாக எடுத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறேன்"  என்றும், தனது வெற்றியின் ரகசியம் குறித்து தெளிவாக டிவி செய்தியாளரிடம் அவர் விளக்கம் அளித்தார். 

இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர் தற்போது பிஹெச்டி படித்து முனைவர் (டாக்டர்) பட்டம் பெறுவதற்கான ஆராய்ச்சி கட்டுரைகளை தயாரிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

 இத்தனை பொறுப்புகளுக்கு மத்தியிலும் அவருடைய குழந்தைகளை படிப்பில் சிறந்தவர்களாக அவர் உருவாக்கி வருவதை பாராட்டியே ஆக வேண்டும். 

"எனது குழந்தைகள் 94 சதவீதம் முதல் 100% வரை மதிப்பெண்கள் பெற்று வருகிறார்கள். எனது மகள்களில் ஒருவர் மன்னர் அப்துல் அஜீஸ் குழந்தைகள் கல்வி மையத்தின் ஆதரவுடன் கல்வியில் முன்னணியில் விளங்கி வருகிறார்" என்றும் அந்த "சூப்பர் மம்மி" பெருமிதத்துடன் குறிப்பிட்டார். 

" எத்தனை பெரிய குடும்பம்.. அவர்களுக்கு கற்பித்தல் மற்றும் குடும்ப நிர்வாகம் ஆகியவற்றை சமாளிப்பது ஒன்றும் எளிதான காரியம் அல்ல; சரியான திட்டமிடல் மூலமே என்னால் இதை சாத்தியப்படுத்த முடிகிறது. எத்தனையோ இக்கட்டான ஒரு சூழ்நிலையிலும், எனது "கல்வி கனவை" கைவிடாமல் நான் தொடர்வதற்கு கடவுளுக்கு (அல்லாஹ் ) நன்றி கூறுகிறேன். 

கடின உழைப்பு மற்றும் ஒழுக்கத்தால் எதையும் சாதிக்கலாம்" என்றும், இறுதியில் நம்பிக்கையுடன் தனது பேட்டியை முடித்துக் கொள்கிறார், ஹம்தா அல் ருவைலி. 

இந்த 'மங்கையர் திலக'த்தின் அனுபவமும் உத்வேகமும் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லை!.
 

இதையும் படிங்க: நீதிமன்றங்களில் ஆண், பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனி கழிவறை அவசியம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share