சிறுபான்மையினருக்கு திமுக செய்தது என்ன.? இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வில் அண்ணாமலை சரவெடி.!!
சிறுபான்மையின மக்களுக்கு திமுக என்ன செய்தது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
பாஜக சிறுபான்மையினர் அணி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்ட பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசுனார். "உங்களோடு நாங்களும் இப்தார் நோன்பில் பங்கேற்பதை கடவுள் கொடுத்த வரப்பிரசாதமாகக் கருதுகிறோம். நம்முடைய கொள்கை என்ன என்பது குறித்து தமிழிசை சிறப்பாக பேசி உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசுவதை நான் மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.
தலைவர்கள் அனைவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதமர் மோடி தலைமையை ஏற்று பயணம் செய்கின்றனர். எல்லா கட்சியிலும் சிறுபான்மை தலைவர்கள், தொண்டர்கள் இருக்கிறார்கள். சிறுபான்மையின மக்களுக்காக மேடையி்ல் உள்ள தலைவர்கள் உழைக்கின்றனர். நாங்கள் சிறுபான்மையின மக்களுக்கு என்ன செய்தோம் என்பதை பாஜக தலைவர்கள் ஆதாரப்பூர்வமாக தெரிவிக்க முடியும். ஆனால், அவர்களுக்கு நாம் எதிரி என சொல்லும் திமுகவிடம் சிறுபான்மையின மக்களுக்கு என்ன செய்தீர்கள் எனக் கேட்டுப் பாருங்கள்.
திமுகவினரும் முதல்வர் ஸ்டாலினும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் மட்டும் சிறுபான்மையின மக்கள் பக்கத்தில் அமர்ந்து நாங்கள் உங்கள் பாதுகாவலன் என்று பேசுவார்கள். ஆனால், நான்கு ஆண்டு கால ஆட்சியில் எந்த விஷயமும் நடந்திருக்காது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சிறுபான்மையின மக்களுக்கு எங்காவது எதிரியாக இருந்து இருக்கிறோமா?
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் எங்காவது தவறு நடந்துள்ளதா? அதற்கு பிரதமர் அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணி காரணமா என யோசித்து பாருங்கள். பிரதமர் மோடிக்கு 20 நாடுகள் உயரிய விருது வழங்கியுள்ளன. அதில் 7 முஸ்லிம் நாடுகள்.
முதல்வர் ஸ்டாலின் கையில் இந்திய வரைபடத்தை கொடுத்து, மணிப்பூரை தொட்டு காட்டச் சொல்லுங்கள். அப்படி காட்டினால் அரசியலை விட்டு போகிறேன். மணிப்பூர் எங்கு இருக்கிறது என அவருக்குத் தெரியாது. ஆனால், மணிப்பூரில் நடந்ததற்கு பிரதமர் மோடிதான் காரணம் என சொல்கின்றனர். எங்கு என்ன நடந்தாலும் பாஜக மீது பழி போடுவது மட்டுமே முழு நேர பணியாக முதல்வர் வைத்து உள்ளார்." என்று அண்ணாமலை கூறினார்.
இதையும் படிங்க: எத்தனை தேர்தல் வந்தாலும் மோடி தான் பிரதமர்... இஃப்தார் விழாவில் ஓபிஎஸ் புகழாரம்!!
இதையும் படிங்க: இப்தார் நோன்பு திறப்பா..? பாஜக கூட்டணி அறிவிப்பா..?