வாடகை தராமல் கோயில் நிலத்தில் குடியிருப்பதா..? அப்புறப்படுத்த அறநிலையத்துறைக்கு உத்தரவு..!
கோவில் நிலத்தில் ஆக்கிரமித்து குடியிருப்பதற்கு வாடகை தராதவர்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசி அருள்மிகு அண்ணாமலைநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்து அப்புறப்படுத்துவதற்கு எதிராக அதே பகுதியை சேர்ந்த உடுமன் மொஹிதீன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில், அறநிலையத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடையநல்லூர் அருள்மிகு அண்ணாமலைநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தை பொது ஏலத்தில் விற்பனை செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்து கடந்த 1995ம் ஆண்டில் விற்பனை செய்தது.
இதையும் படிங்க: ஆன்லைன் விளையாட்டு மட்டுமே தற்கொலைக்கு காரணமல்ல... ஆன்லைன் நிறுவனம் விளக்கம்..!
பின்னர், அறநிலையத்துறையின் அனுமதி இல்லாமல் இடம் விற்பனை செய்யப்பட்டதாக 1997ம் ஆண்டு நில விற்பனை உத்தரவை அறநிலையத்துறை ஆணையர் ரத்து செய்தார். விற்பனை செய்யப்பட்ட கோவில் நிலத்தை யாரும் உரிமை கோர முடியாது என தென்காசி மாவட்ட நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கோவில் நிலத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 81 ஆக்கிரமிப்பாளரிடம் வாடகை வசூலிக்க அறநிலையத்துறை முடிவு செய்தது. ஆனால், கோவில் இடத்திற்கு வாடகை தர முடியாது என ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், உரிய பாதுகாப்பை வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள், ஆர். சுரேஷ்குமார், மரியா கிளாடி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை சார்பில், அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பியதில் 58 பேர் அதை ஏற்றுக் கொண்டனர். 23 பேர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோவில் நிலங்களை யாரும் ஆக்கிரமிப்பு செய்ய அனுமதிக்க முடியாது. அனைவருக்கும் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி வாடகையை வசூலிக்க வேண்டும். வாடகை தர எதிர்ப்பு தெரிவிப்பவர்களை அப்புறப்படுத்தும் போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க காவல்துறை போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 21ம் தேதி ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: இலங்கை அகதிகளுக்கு தமிழ்நாட்டில் பிறந்த குழந்தை.. குடியுரிமை குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு உத்தரவு..!