மனைவி கண்முன்னே கணவன் தலையை துண்டித்து வெறியாட்டம்.. முன்விரோதத்தால் நிகழ்ந்த கொடூரம்..!
தென்காசி அருகே மனைவி கண்முன்னே கணவரை கொன்று அவரது தலையை துண்டித்த கொலைவெறி கும்பலை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி அடுத்த குற்றாலம் அருகே உள்ள காஜிமேஜர்புரத்தை சேர்ந்தவர் குமாரசாமி மகன் குத்தாலிங்கம் வயது 36. கீழப்புலியூரை சேர்ந்த தனலட்சுமி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். இவர் தனது மனைவியின் ஊரான கீழப்புலியூர் பகுதியில் கார்மெண்ட்ஸ் மற்றும் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் குத்தாலிங்கம் கீழப்புலியூரில் உள்ள ரேஷன் கடையில் தனது மனைவியுடன் பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.
அப்போது குத்தாலிங்கத்தை 4 பேர் கும்பல் சரமாரியாக வெட்டி கொன்றது. தலையை மட்டும் தனியாக துண்டித்து, தாங்கள் வந்த பைக்கில் எடுத்து சென்றது. குத்தாலிங்கத்தின் மனைவி மற்றும் ஊர் மக்கள் பலர் முன்பு இந்த கொடூர கொலை நடந்தது. கீழப்புலியூரில் இருந்து தென்காசியின் முக்கிய பகுதி வழியாக சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் குத்தாலிங்கத்தின் சொந்த ஊரான காசிமேஜர்புரத்தில், அவரது தலையை வைத்து விட்டு அந்த கும்பல் தப்பியது.
பட்டப்பகலில் ரேஷன் கடை வாசலில் மனைவி மற்றும் பல பேர் முன்னிலையில் ஒரு நபரை வெட்டிக்கொலை செய்து விட்டு தலையை துண்டித்து கையில் எடுத்துக் கொண்டு ஒரு ஒரு கும்பல் தப்பிச் சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
தகவல் அறிந்த தென்காசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குத்தாலிங்கத்தின் உடலையும், காசி மேஜர்புரம் அம்மன் கோவில் பகுதியில் இருந்த தலையையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கடந்த ஆண்டு நவம்பரில் காசிமேஜர்புரத்தில் நடந்த ஒரு கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற தகவல் வெளியானது.
அதாவது, திருமண விழாவின் போது பேனர் வைப்பது தொடர்பாக நண்பர்களுக்குள் மோதல் வெடித்தது.பட்டுராஜா என்ற இளைஞரை குத்தாலிங்கத்தின் தம்பி மற்றும் சிலர் சேர்ந்து கொலை செய்ததாக வழக்கு உள்ளது. இந்த சம்பவத்துக்கு பழிவாங்கவே பட்டுராஜா தரப்பினர், குத்தாலிங்கத்தை கொலை செய்திருக்கின்றனர். எனவே தான், பட்டுராஜா கொலை நடந்த காசிமேஜர்புரம் அம்மன் கோயில் பக்கத்தில் அவரது தலையை வைத்து விட்டு சென்றிருக்கின்றனர் என்று போலீசார் கருதினர்.
இந்த நிலையில் கொலையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் இப்போது கைது செய்திருக்கின்றனர். இதில் முக்கிய நபர் ராமசுப்பிரமணியன் என்ற ரமேஷ் (வயது 25). இவருடன் ஹரிகர சுதன் (வயது 24), செண்பகம் (வயது 40), புறா மணி (வயது 25) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தென்காசி கோயிலை சுழற்றி அடிக்கும் ஊழல் புகார்.. 1 மணி நேரம் மந்திரம் சொல்ல ரூ.45 லட்சம் சம்பளமா..?
இவர்களிடம் விசாரித்த போது திடுக்கிடும் தகவல் வெளியானது. கைதானவர்களில் ரமேஷ் தான் முக்கிய நபர். இவர், கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட பட்டுராஜாவின் மைத்துனர். அதாவது, பட்டுராஜா மனைவியின் சொந்த தம்பி. பங்குனி உத்திரம் அன்று ஐந்தருவி பக்கத்தில் ஆட்டு கிடை போட்டிருந்தார் ரமேஷ். ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு சாப்பிடுவதற்காக வீட்டுக்கு சென்றிருந்தார்.
அந்த சமயத்தில் 4 பேர் ஆட்டு கிடை பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுத்தி திரிந்து இருக்கின்றனர். மீண்டும் ஆட்டு கிடைக்கு ரமேஷ் வந்த போது, குத்தாலிங்கம் மற்றும் சிலர் இங்கு உலாவியதாக அவரிடம் அக்கம் பக்கத்தினர் கூறினர். இதனால், ஏற்கனவே தனது மைத்துனரை கொன்றவர்கள், தன்னையும் கொலை செய்ய வந்திருக்கலாமோ என்ற சந்தேகம் அவருக்கு வந்தது.
இந்த நிலையில் கொலை நடந்த அன்று காலையில் குத்தாலிங்கம் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறார். அதில் ஆடு வெட்டுவது போன்ற ஒரு படத்தை அவர் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இது ரமேஷ் கவனத்துக்கும் போனது. எனவே, குத்தாலிங்கம் தரப்பு தான் ஆட்டு கிடைக்கு வந்து தன்னை கொலை செய்ய திட்டமிட்டு இருக்க வேண்டும் என்று ரமேஷ் கருதி இருக்கிறார். குத்தாலிங்கம் தரப்பு முந்துவதற்குள், நாம் முந்தி விட வேண்டும் என்று முடிவு செய்தார்.
அன்றைய தினமே அவசர அவசரமாக திட்டம் போட்டார். தனது உறவினர்களான மற்ற 3 பேரையும் அழைத்து சென்று கொடூர கொலையை நிகழ்த்தி இருக்கிறார். அதோடு மச்சான் கொலைக்கு பழிதீர்த்ததால் குத்தாலிங்கம் தலையை எடுத்து சென்று, பட்டுராஜா கொல்லப்பட்ட இடத்தில் வைத்து இருக்கிறார் என்று போலீஸ் தரப்பில் கூறினர். இது முதல் கட்ட தகவல் தான். இப்போது தான் முழுமையான விசாரணை நடக்கிறது. இதன் முடிவில் தான் உண்மையில் என்னவெல்லாம் நடந்தது என்று தெரியவரும் என்றும் போலீசார் கூறினர்.
இதையும் படிங்க: ரேஷன் கடைக்குச் சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்; துண்டான தலை; கொடூரமாக வெட்டிக்கொலை!