அண்ணனை தீர்த்துக்கட்ட முடிவு செய்த தம்பி.. வண்டி ஏற்றி கொலை செய்ய முயற்சி.. விபத்து நாடகமாடிய இருவர் கைது!
செங்கோட்டையில் சொத்து பிரச்சனையில் அண்ணனை வண்டி ஏற்றி கொலை செய்ய முயற்சித்து விபத்து என்று நாடகமாடிய தம்பி மற்றும் அவரது மகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் புளியரை தெற்குமேடு பாக்யா நகரை சேர்ந்தவர் சுப்பையா பாண்டியன். அதே பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது உடன் பிறந்த தம்பி இருளப்பன். இவரும் அதே ஊரில் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் பொதுவான இடத்தின் நடைபாதையை யார் பகிர்ந்து கொள்வது என்பதில் பல நாட்களாகவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சுப்பையா பாண்டியன் தனது காய்கறி கடைக்காக பொருட்கள் வாங்க அதிகாலையிலேயே தனது டூவிலரில் சந்தைக்கு சென்றுள்ளார். செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய பிள்ளை வலசை வழியாக செல்லும் போது விபத்தில் சிக்கிய சுப்பையா பாண்டியன் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்.
இதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் செங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய சுப்பையா பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுப்பையா பாண்டியனை இடித்த வாகனம் அடையாளம் தெரியாததால் செங்கோட்டை போலீசார் இந்த வழக்கை கையில் எடுத்து விசாரிக்க ஆரம்பித்தனர். விபத்து நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை சோதனை செய்ததில் சுப்பையா பாண்டியன் வந்த டூவிலரை பின்னால் வந்த லோடு ஆட்டோ (pickup van) வேண்டுமென்றே மோதியது தெரியவந்தது. விபத்தில் சுப்பையா பாண்டியன் சாக வேண்டும் என்றே அதிவேகமாக லோடு ஆட்டோ மோதிவிட்டு நிறுத்தாமல் தப்பிச் சென்றது தெரிந்தது. சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் அந்த வாகனம் யாருக்கு சொந்தமானது என விசாரணையை துவங்கினர்.
இதையும் படிங்க: கண்ணை மறைத்த கள்ளக்காதல்! மனைவியை கண்மூடித்தனமாக வெட்டிசாய்த்த கணவன்..!
செங்கோட்டை காவல் ஆய்வாளர் பாலமுருகன் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரித்தார். அப்போது சுப்பையா பாண்டியனுக்கும், அவரது உடன்பிறந்த தம்பி இருளப்பனுக்கும் இடையே நடைபாதை தொடர்பாக முன்பகை இருந்து வந்ததும், சுப்பையா பாண்டியனை இடித்த லோடு ஆட்டோ இருளப்பன் உடையது என்பதும் விசாரணையில் உறுதியானது. இதையடுத்து இருளப்பனை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இருளப்பனையும் அவரது மகன் வினோத்குமாரையும் போலீசார் தனித்தனியாக விசாரித்தனர். விசாரணையில் இருவரும் முன்னுக்கு பின்னாக பேசியதில் இருந்து இது விபத்து அல்ல கொலை முயற்சி என போலீசாருக்கு தெரிய வந்தது. அதன் பின்னர் போலீசார் தங்களது பாணியில் விசாரிக்க துவங்கவும், இருளப்பன் அனைத்து உண்மைகளையும் ஒப்புக்கொண்டார். அண்ணனுடன் ஏற்பட்ட நடைபாதை தகராறில் முன்பகை இருந்த காரணத்தால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். ஆனால் அது கொலையாக தெரியக்கூடாது என்பதால், காலையில் அதிக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் எனது ஆட்டோவால் அவரை இடித்து தள்ளி அதை விபத்து என உருவகப்படுத்த பார்த்தேன் என இருளப்பன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதன் பின்னர் கொலை முயற்சியில் ஈடுபட்ட இருளப்பன் மற்றும் அவரது மகன் வினோத்குமாரை கைது செய்த போலீசார், கொலை முயற்சிக்காக அவர்கள் பயன்படுத்திய லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். நடைபாதை பிரச்சனையில் தனது சொந்த அண்ணனையே தம்பி மற்றும் அவரது மகன் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டது செங்கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது
இதையும் படிங்க: போலீசுக்கு விழுந்த அடி! அரைநிர்வாணத்தில் போலீசுடன் தகராறு.. வழக்கறிஞர் கவுன்சில் தலைவர் அட்டூழியம்..