தி.நகர் பிரபல ஜவுளிக்கடையில் துணிகரம்...மேல் சுவரை துளையிட்டு ரூ.9 லட்சம் ரொக்கம் கொள்ளை
சென்னை தி.நகரில் உள்ள குமரன் சில்க்ஸ் கடையில் 4 வது மாடியின் மேல் கூரையை பிரித்து உள்ளே நுழைந்து ரூ.9 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற 3 மர்ம நபர்களை போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் தேடி வருகின்றனர்.
சென்னை தி.நகர் நாகேஸ்வரா ராவ் சாலையில் குமரன் சில்க்ஸ் கடை இயங்கி வருகிறது. 4 மாடி கட்டிடத்தின் இயங்கி வரும் இந்த கடையில் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வந்து செல்வார்கள். தினமும் இரவு 9 மணிக்கு மேல் கடையின் கணக்கு வழக்குகள், ரொக்கப்பணம் வியாபாரம் உள்ளிட்டவற்றை கணக்கிட்டு மறுநாள் வங்கியில் கட்டுவதற்காக வைத்துவிட்டு செல்வார்கள். இது தினமும் நடக்கும் வழக்கமான நிகழ்வாகும். நேற்று இரவும் வழக்கம் போல் பணி முடிந்து ஊழியர்கள் சென்றுவிட்டனர். கல்லாவில் ரூ.9 லட்சம் ரொக்கப்பணம் இருந்துள்ளது.
இன்று காலை வழக்கம் போல் கடையை திறந்தனர். வியாபாரம் நடக்க ஆரம்பித்தபோது கடையின் கேஷியர் அஜித் கல்லா பெட்டியை வந்து பார்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே கல்லாப்பெட்டியை திறந்து பார்த்த போது, நேற்று இரவு வியாபாரமான ரூ.9 லட்சம் ரொக்கம் மாயமாகி இருந்தது தெரியவந்தது. கடையின் ஷட்டர் உடைக்கப்படவில்லை. அனைத்தும் சரியாக உள்ளது. ஆனால் கல்லா பெட்டியின் பூட்டு மட்டுமே உடைக்கப்பட்டு பணம் மாயமாகியிருந்ததை பார்த்து குழம்பிப்போன அனைவரும் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையும் படிங்க: தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது அமெரிக்காவிடமிருந்து நிதி உதவி பெறவில்லை - பாஜக குற்றச்சாட்டுக்கு குரேஷி பதில்
பின்னர் இச் சம்பவம் குறித்து குமரன் சில்க்ஸ் கேஷியர் அஜித் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரைப் பெற்ற போலீசார் கடைக்கு வந்து விசாரணை. தடயவியல் நிபுணர்களை அழைத்து வந்து பல இடங்களை சோதனை செய்தபோது, கடையின் 4-வது மாடியில் உள்ள கூரை உடைந்திருப்பதை கண்டனர். கடையை அக்குவேறு ஆணிவேறாக ஆய்வு செய்து திட்டமிட்டு 4 மாடியிலிருந்து மேற்கூரையை துளையிட்டு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
மேற்கண்ட காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சியிலும் பதிவாகி இருந்தது. 3 நபர்கள் மேற்கூரை வழியாக இறங்குவதும், அவர்கள் முகமுடி அணிந்து அடையாளம் காண முடியாத வகையில் மறைத்திருப்பதும் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து முகமூடி அணிந்து கொள்ளையடித்து சென்ற 3 பேரின் புகைப்படங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடையாளம் தெரியாமல் முகத்தை மறைத்தாலும், அந்த நேரத்தில் செல்போன் பயன்பாடு குறித்து அறியும் டெக்னாலஜி மூலமாகவும், வேறு சில தடயங்கள் சேகரிப்பு மூலமாகவும், மற்ற கடைகளில் உள்ள சிசி டிவி காட்சிகள் மூலம் மூவரும் வந்த வாகனம், புறப்பட்டு சென்றபோது ஏதாவது வாகனத்தை பயன்படுத்தியுள்ளார்களா? என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கொள்ளை அடிப்பதற்கு முன் கடையை நோட்டம் பார்க்க வந்திருக்கலாம் என்கிற அடிப்படையிலும் பழைய சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.
கடைக்கு ஒரு வாரம் மற்றும் இன்று வேலைக்கு வராத ஊழியர்களின் விவரங்களை போலீசார் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் சிசிடிவியில் பதிவாகி உள்ள 3 பேரின் புகைப்படங்களை பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களுடனும், அதேபோல் கடையில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர்கள் பழைய குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் கொள்ளையடித்துச் சென்றவர்கள் விரைவில் பிடிபடபோவது உறுதி என்கின்றனர் போலீஸார்
இதையும் படிங்க: அதிமுகவில் அடுத்த பிரளயத்துக்குக் காத்திருந்த சீனியர் நிர்வாகி… பதவி கொடுத்து ஆஃப் செய்த எடப்பாடியார்..!