விவசாயி என்ற முறையில் சொல்கிறேன், வேளாண் பட்ஜெட் பாராட்டத்தக்க ஒன்று - வேல்முருகன்..!
நான் ஒரு விவசாயி என்ற முறையில் வேளாண் பட்ஜெட் பாராட்டத்தக்க ஒன்று என கூறுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் வேளாண்மை பட்ஜெட்டை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக கடந்த நான்கு ஆண்டுகளாக சட்டமன்றத்தில் பொது நிதிநிலை அறிக்கையின் போதும் வேளாண் நிதிநிலை அறிக்கையின் போதும் முதலமைச்சருக்கும் வேளாண் துறை அமைச்சருக்கும் முக்கியமான ஒரு கோரிக்கையை முன்வைத்து வந்ததாக தெரிவித்தார்.
தனது பண்ருட்டி தொகுதியில் பெருமளவு முந்திரி விவசாயம் செய்யப்பட்டு வருவதாகவும், முந்திரி விவசாயிகள் பலன் பெறும் வகையில் முந்திரி விவசாயிகளுக்கென நலவாரியம் அமைக்க வேண்டும் என்று கடந்த 2001 ஆம் ஆண்டிலிருந்து வலியுறுத்தி வந்ததாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: போதையிலும் பாலியல் குற்றங்களிலும் சிக்கி சீரழியும் எதிர்கால தலைமுறை... திமுக கூட்டணி கட்சி கடும் விரக்தி..!
தனது கோரிக்கையை ஏற்று, 10 கோடி ரூபாய் செலவில் முந்திரி நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், தான் ஒரு முந்திரி விவசாயி என்ற அடிப்படையில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் முந்திரி விவசாயிகள் சார்பாகவும் தனது சார்பாகவும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வத்திற்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்று 2001 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து சட்டப்பேரவையில் வலியுறுத்தி வரும் நிலையில் இதுவரை அறிவிப்பு வெளியிடப்படாதது வருத்தமளிப்பதாகவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு நியாயமான கட்டுப்படியான விலை நிர்ணயம் தேவை என்றும் வலியுறுத்தினார்.
பெங்களூரு மற்றும் மங்களூர் பகுதிகளில் முந்திரி பழ சாறை கொண்டு ஒயின் தயாரிப்பதாகவும், இதனை குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துக்காக கொடுக்கப்படுவதாகவும் கூறினார்.
எனவே அதில் போதை பொருட்களை அதிகளவில் கலக்காமல் ஊட்டச்சத்து பானமாக அதனை மாற்றி விற்க பண்ருட்டி தொகுதியில் ஒரு தொழில் கூடத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளதாகவும், இது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்ட அறிக்கை தமிழக அரசிடம் உள்ளதாகவும் எனவே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் ஏராளமான மதுபான தொழிற்சாலைகள் இருக்கும் நிலையில், ஒயின் என்பது ஊட்டச்சத்து பானம், எனவே முதலமைச்சர். இதனை பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்
இதையும் படிங்க: மானிய கோரிக்கைகளுக்கான அறிவிப்புகளில் அதை சரி செய்யனும்... திருமா கூறுவது என்ன?