ஆங்கிலம் கற்றதால் தான் பெரிய நிறுவனங்களில் தமிழர்கள் உள்ளனர்..இந்தியை கற்பதால் என்ன பயன்?.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி..
நாகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, அந்த மாவட்டத்திற்கு 6 திட்டங்களை அறிவித்தார்.
நாகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, அந்த மாவட்டத்திற்கு 6 திட்டங்களை அறிவித்தார். 250 கோடி ரூபாய் செலவில் நாகை மாவட்டத்தில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்றார். விழுந்தமாவடி பகுதியில் 12 கோடியில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
150 ஆண்டுகள் பழமையான நாகை நகராட்சி கட்டிடம் 4 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும் என்பது உள்ளிட்ட 6 அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார். மேலும் 65 கோடி செலவில் சென்னை நங்கநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்குத் தான் உள்ளது என்றார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியது போல் மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். இயற்கை பேரிடர் நிவாரண நிதியைக் கூட மத்திய அரசு முழுமையாக தருவதில்லை என்றும் அவர் பேசினார்.
இதையும் படிங்க: முதல்வர் பிறந்த நாள்.. கேக் வெட்டி கொண்டாடிய நிர்வாகிகள்..!
தமிழக அரசின் முன்னேற்றத்திற்கு காரணமான இருமொழிக் கொள்கையை சிதைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்வதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக கூறினார். இருமொழிக் கொள்கை மூலம் தமிழர்கள் ஆங்கிலத்தை கற்றுக் கொண்டதால் தான் முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்று அவர் எடுத்துரைத்தார். தமிழர்கள் இந்தியைக் கற்றுக் கொண்டிருந்தால் முன்னேற்றம் அடைந்திருக்க மாட்டார்கள் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தி ஆதிக்கம் எதற்கு தெரியுமா? சிலர் இனத்தின் ஆதிக்கத்திற்காகத் தான். இந்த சதியை பல ஆண்டுகளுக்கு முன்னர் தான் தமிழகம் உணர்ந்து விட்டது. இதனை இப்போது தமிழக மக்கள் உணர்ந்து விட்டார்கள் என்றும் கடலூர் சிறுமி நன்முகை தனது சேமிப்பை தமிழக அரசுக்கு வழங்கியதைக் குறிப்பிட்டு நெகிழ்ந்து பேசினார்.
நமது குரலை நசுக்கத் தான் தொகுதி மறுசீரமைப்பு வர இருக்கிறது. நாளை மறுநாள் அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வையுங்கள். சுயநலத்திற்காக மனசாட்சியை அடகு வைத்து விடாதீர்கள். தயவு செய்து அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வாருங்கள் என்று எதிர்கட்சிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் அழைப்பு விடுத்தார்.
இதையும் படிங்க: அடேங்கப்பா..! இந்துசமய அறநிலையத்துறையில் இவ்வளவு புதிய திட்டங்களா..? கலக்கும் ஸ்டாலின் திமுக அரசு..!