×
 

6 மாவட்டங்களுக்கு மா.செ.க்களை நியமிப்பதில் என்ன சிக்கல்..? தவெகவில் உட்கட்சி சிக்கலால் தவிக்கும் விஜய்..!

சென்னை, திருவள்ளுர், தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்களை நியமிக்க முடியாமல் தவெக தலைவர் விஜய் திணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி (இப்போதைக்கு நாளை மாறலாம்), நாம் தமிழர் என்று நான்கு முனை போட்டியாக இருந்ததை தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியதன் மூலம் 5 முனை போட்டியாக மாற்றியவர் நடிகர் விஜய். 

கட்சி தொடங்கி 2-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், திராவிட கட்சிகளின் பாணியில் அடிமட்ட அமைப்பை பலப்படுத்தும் முயற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய். 

அதாவது தமிழ்நாட்டை கட்சிரீதியாக 120 மாவட்டங்களாக பிரித்து அதற்கு மாவட்டச் செயலாளர்களை நியமித்து வருகிறார். இதுவரை 95 மாவட்டங்களுக்கு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அப்படி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு தன்னுடைய உருவம் பொறித்த நாணயத்தை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் பூத் கமிட்டிகளுக்கான நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்பதே மாவட்டச் செயலாளர்களுக்கு விஜய் போட்டுள்ள முதலாவது உத்தரவு. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் களத்தில் பணியாற்றியவர்களுக்குத் தெரியும், பூத் கமிட்டி ஏஜெண்டுகளின் முக்கியத்துவம் என்னவென்று...

இதையும் படிங்க: தூக்கி அடித்த 50 வருட ரஜினி ரசிகர்...! விஜய் உடன் சேருகிறாரா சோளிங்கர் ரவி..!

ஒரு தொகுதியில் எத்தனை வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறதோ, அங்கு குறைந்தபட்சம் 3 பேர் கொண்ட ஒரு குழு பணியாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது மொத்தம் 68,144 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அப்படியெனில் 2,04,432 பூத் கமிட்டி உறுப்பினர்கள் தேவைப்பட்டிருப்பார்கள். இதுவே சட்டமன்ற தேர்தலுக்கு என்றால் இதைக்காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம்.  ஒரு கட்சியில் இவ்வளவு அர்ப்பணிப்பும், துடிப்பும் மிக்க தொண்டர்பட்டாளம் இல்லாமல் பூத் கமிட்டி அமைப்பது சாத்தியமல்ல. இன்றளவும் கூட திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளைத் தாண்டி வேறெந்த கட்சிக்கும் எல்லா வாக்குச்சாவடிகளிலும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் இல்லை என்பதே உண்மை.

எனவே தான், தனது மாவட்டச் செயலாளர்களுக்கு பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்க விஜய் ஆர்வம் காட்டி வருகிறார். அப்படிப்பட்ட அவரே, சென்னை, திருவள்ளுர், தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்னும் மாவட்டச் செயலாளர்களை நியமிக்க முடியாமல் திணறி வருகிறார். உட்கட்சி மோதலே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. 

குறிப்பாக தூத்துக்குடி மாவட்ட தவெக பொறுப்பாளராக இருப்பவர் அஜிதா ஆக்னல். ஆனால் இவர் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர் இல்லை என்று யாரோ ஒருசிலர் விஜயிடம் போட்டுக்கொடுக்க இவரது மாவட்ட செயலாளர் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம். தன்னுடைய சாதிச் சான்றிதழை அனுப்பி தான் மீனவர் தான் என்று அஜிதா கூறுமளவுக்கு விஜயை சுற்றி உள்ளவர்கள் திசைதிருப்பல் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனராம்.

சொந்த கட்சி பிரச்னையையே தீர்க்க முடியாதவரா? தமிழ்நாட்டு பிரச்னையை தீர்ப்பார் என்று இதனை வைத்து விமர்சித்து வருகின்றனர் அரசியல் நோக்கர்கள்.
 

இதையும் படிங்க: நாளை வெளியாகிறது தவெக மாவட்ட செயலாளர்கள் பட்டியல்... வெளியிடுவது யார் தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share