‘இந்தியா கூட்டணி’ மக்களவைத் தேர்தலோடு முடிந்துவிட்டது: தேஜஸ்வி யாதவ் வெளிப்படை
மக்களவைத் தேர்தலுக்காக மட்டும் உருவாக்கப்பட்டதுதான் எதிர்க்கட்சிகள் சேர்ந்து அமைத்த இந்தியா கூட்டணி. இப்போது அது முடிந்துவிட்டது..
பாஜகவைத் தோற்கடிப்பதற்காக மக்களவைத் தேர்தலுக்காக மட்டும் உருவாக்கப்பட்டதுதான் எதிர்க்கட்சிகள் சேர்ந்து அமைத்த இந்தியா கூட்டணி. இப்போது அது முடிந்துவிட்டது, முக்கியத்துவத்தை இழந்துவிட்டது என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சேர்ந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின. ஆனால், தேர்தலில் பாஜக 3வது முறையாக வென்று ஆட்சியைப் பிடித்தது. இருப்பினும் இந்தியா கூட்டணிக்கு வழக்கத்தைவிட அதிகமான இடங்களைப் பிடிக்க முடிந்தது.
ஆனால், இந்தியா கூட்டணிக்கு யார் தலைமை ஏற்பது, தலைவராக யார் வருவது என்ற சிக்கல் தொடக்கம் முதலே இருந்தது. இதனால் இந்தியா கூட்டணியை உருவாக்கிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அந்தக் கூட்டணியிலிருந்து விலகி, திடீரென பீகாரில் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துவிட்டார். இதனால் இந்தியா கூட்டணிக்கு தலைமை, தலைவர் இல்லாமலே தேர்தலை சந்தித்தது. ஆனால், எதிர்க்கட்சிகளுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள், இடைவெளிகள், கொள்கை முரண்பாடுகள் இருந்ததால், இந்தியா கூட்டணி சார்பில் தொடர்ந்து கூட்டங்கள் நடக்கவில்லை.
சமீபத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்தியா கூட்டணி தலைவராக விரும்பவதாக மறைமுகமாகத் தெரிவித்தார். இதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி பிரசாத் யாதவ் பக்ஸர் நகரில் நேற்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எதிர்க்கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய இந்தியா கூட்டணி என்பது மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி. தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் அந்த கூட்டணி இப்போது இல்லை, அதற்கான முக்கியத்துவமும் இல்லை. அதனால்தான் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் மோதல் ஏற்பட்டது, இது எதிர்பாராமல் நடந்தது அல்ல.
டெல்லியில் பிப்ரவரி 5ம் தேதி நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை போட்டியிடுவது குறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி முடிவு எடுக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், ஆர்ஜேடி இணைந்து தேர்தலைச் சந்திக்கும்.
இதையும் படிங்க: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’: பாஜக கூட்டணிக்குள் சலசலப்பு: நிதிஷ் கட்சி, ஒய்எஸ்ஆர் கட்சி, எதிர்க்கட்சிகள் சராமரி கேள்வி
இந்தியா கூட்டணியின் நிலை குறித்தும், தலைமை குறித்தும் சமீபத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தேகங்களை எழுப்பியிருந்தார். இந்தியா கூட்டணியை வழிநடத்த காங்கிரஸ் கட்சியைவிட, மம்தா பானர்ஜி சிறந்தவர் என நான் கருதுகிறேன். மம்தா பானர்ஜி தலைவராக வருவதற்கு தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஓமர் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத்பவார், உத்தவ் தாக்கரே சிவசேனா ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பீகாரில் இனிமேல், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் எந்த கூட்டணியும் இல்லை, அந்த கேள்விக்கே இடமில்லை. எங்களுக்கு முதல்வர் பதவி வழங்குவதாக பாஜக கூறினாலும் கூட்டணி அமையாது. பீகார் முதல்வராக நிதிஷ் குமார் தனது 20 ஆண்டு கால ஆட்சியில் மாநிலத்தை பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டார். நிதிஆயோக் அறிக்கையில் கூட, அதிகமான வேலையின்மை நிலவும் மாநிலம், பிழைப்புதேடி வெளிமாநிலம் செல்லும் மக்கள் உள்ள மாநிலம் என பீகாரை குறிப்பிட்டுல்ளது.
தேசிய ஜனநாயகக்கூட்டணியில் இடம் பெற்றும், 20 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும், மத்தியில் 10 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தும், பாஜகவைச் சேர்ந்த இரு துணை முதல்வர்கள் இருந்தும் மாநிலத்தை முன்னேற்ற முடியவில்லை. பீகார் தொடர்ந்து பின்னோக்கித்தான் செல்கிறது. இதுவரை சிறப்பு தொகுப்பு, சிறப்பு நிதிச்சலுகை ஏதும் மத்திய அரசிடம் இருந்து பெற முடியவில்லை.
பீகார் மாநிலம் ஏற்கெனவே நிதிச்சிக்கலில் இருக்கும் போது, ரூ.200 கோடியில் முதல்வர் நிதிஷ் குமார் பிரகதி யாத்திரை செல்கிறார். மக்களைச் சந்திப்பதற்குப் பதிலாக இந்த யாத்திரையில் நிதிஷ் குமார் அதிகாரிகளைச் சந்திக்கிறார்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விடை பெறும் காங்கிரஸ்! 50 ஆண்டுகளுக்குப்பின் அக்பர் சாலையிலிருந்து கோட்லா சாலைக்கு மாற்றம்..