பாஜக கூட்டணியில் சலசலப்பு: பீகார் சட்டசபை தேர்தல் விவகாரத்தில், மத்திய அமைச்சர் போர்க்கொடி
பீகார் மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர், தங்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்காவிட்டால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது. அந்த மத்திய அமைச்சரின் பெயர், ஜித்தன் ராம் மாஞ்சி. அவருடைய கட்சியின் பெயர் அதிகமாக பிரபலமாகாத "ஹிந்துஸ்தான் அவாம் மோர்சா செக்யூலர் (எச் ஏ எம் எஸ்)" கட்சிதான். இதில் வேடிக்கை என்னவென்றால், பீகாரில் தற்போது அந்த கட்சிக்கு நான்கு எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். இருந்த போதிலும் இவருடைய மகன் சந்தோஷ்குமார் சுமன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.
சிறிது நேரத்தில்
"அந்தர் பல்டி"
தங்கள் கட்சிக்கு பீகார் சட்ட சபை தேர்தலில் 40 தொகுதிகள் ஒதுக்காவிட்டால் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விடுவதாக அறிவித்த மாஞ்சி, சிறிது நேரத்திலேயே தனது நிலையில் இருந்து "அந்தர் பல்டி" அடித்து விட்டார்.
இதையும் படிங்க: திருவள்ளுவரையும் திருக்குறளையும் ஆட்டையைப் போடும் திமுக கூட்டம்.. கொந்தளிக்கும் வானதி சீனிவாசன்!
அது குறித்த தனது 'எக்ஸ்' வலைதள பதிவில் "ஊடகங்களும் செய்தி சேனல்களும் நான் பதவி விலகுவதாக மக்களை திசை திருப்பி வருகிறார்கள். சாகும் வரை பிரதமர் மோடியுடன்தான் நான் இருப்பேன்" என்றும் அவர் கூறியிருக்கிறார்.
முங்கூர் என்ற இடத்தில்நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் பேசுகையில், "இந்த கூட்டம் தாமதமாகிவிட்டால் என்னுடைய விமானத்தை நான் தவற விட்டு விடுவேன். அதன் மூலம் மத்திய அமைச்சரவையில் இருந்து தான் விலக வேண்டியது இருக்கும்" என்று தான் கூறியதாக மழுப்பலாக குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆனால் உண்மையில் அந்த கூட்டத்தில் அவர் பேசியது என்னவென்றால், "ஜார்கண்ட் மற்றும் டெல்லியில் தாங்கள் கேட்ட தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. பீகார் சட்டசபை தேர்தலில் கட்சிக்குரிய இடங்கள் கிடைக்க விட்டால் மத்திய அமைச்சர் பதவியைராஜினாமா செய்து விடுவேன். உங்களுடைய (சமூகத்தின்) நலனுக்காகத்தான் நான் தொகுதிகளை கேட்கிறேன்" என்று தான் பேசி இருந்தார்.
ஆனால் என்னவோ தெரியவில்லை அரசியல்வாதிகளுக்கே உரித்தான தன்மையில் சற்று நேரத்தில் அவர் தலைகீழ்பல்டி அடித்து விட்டார். பத்திரிகையாளர்கள் யாரும் இல்லை என்ற நினைப்பில் அவர் அப்படி பேசி இருக்கலாம்.
ஆனால் சமூக ஊடகங்களில் அவருடைய பேச்சு வைரலானதை தொடர்ந்து அதிர்ச்சியில் தனது கருத்தை மாற்றிக் கொண்டு இருக்கலாம். அல்லது "ஆடு மேய்த்தது போலவும் ஆச்சு.. அண்ணனுக்கு பொண்ணு பார்த்தது போலவும் ஆச்சு" என்ற கிராமப்புற "சொலவடை" போல், "கோரிக்கையும் வச்சாச்சு எச்சரிக்கையும் விடுத்தாச்சு என்ற போர்வையில், " சாகும் வரை பிரதமரோடு இருப்பேன்" என்று சரணும் அடைந்தாச்சு "என்பதும் காரணமாக இருக்கலாம்.
டெல்லி சட்டசபை தேர்தலில் ஒரு இடம் கூட அவருடைய கட்சிக்கு ஒதுக்கப்படாததால் மாஞ்சி பாஜக மீது அதிருப்தியுடன் இருப்பதாக கூறப்படுகிறது.
பாஜக கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தலில் கயா தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் தற்போது மத்திய அமைச்சராக பதவி வகித்து வருகிறார்!
இதையும் படிங்க: மாட்டிறைச்சி சாப்பிடுவீங்க, கோமியத்தை ஏன் குடிக்கக்கூடாதா? தமிழிசை கேள்வி