விடிய விடிய விவாதம்.. வக்பு திருத்த மசோதா நிறைவேறியது.. ஆதரவு 288, எதிர்ப்பு 232!
மக்களவையில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே விடிய விடிய நடந்த காரசார விவாதத்துக்கு பிறகு வக்பு திருத்த மசோதா நிறைவேறியது. திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 288 பேரும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர்.
திருத்தப்பட்ட வக்பு வாரிய மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது. இந்தத் திருத்த மசோதாவில் மத்திய வக்பு வாரியம் மற்றும் இதர வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாத இரண்டு உறுப்பினர்கள் கட்டாயம் இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விதி சர்ச்சைக்குரிய விஷயமாக எதிர்க்கட்சி தரப்பில் முன் வைக்கப்படுகிறது. இதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்தனர். இது அரசியலமைப்புக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. மேலும், இந்த மசோதாவை ஆராய நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் அங்கம் வகித்த எதிர்க்கட்சிகளின் பரிந்துரைகள் கருத்தில் கொள்ளவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாதம் செய்தனர். இதன் மூலம் சிறுபான்மையின மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்தது.
முன்னதாக வக்பு சட்ட திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தாக்கல் செய்த போது கடும் அமளி . அப்போது எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். மசோதா மீது அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசுகையில், "இந்த மசோதா ‘உமீது’ மசோதா என பெயர் மாற்றப்படும். அனைத்து மத அமைப்புகளையும் அவற்றின் சுயாட்சியையும் அரசு மதிக்கிறது. அவர்களுடைய மத விவகாரங்களில் தலையிட அரசு முயற்சிக்கவில்லை. சொத்துகளை நிர்வகிக்கும் விவகாரத்தில் தேவையான சீர்திருத்தங்களை கொண்டுவரவும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவுமே வக்பு திருத்த மசோதா வகை செய்கிறது." என்று குறிப்பிட்டார்.
மத்திய அமைச்சர் அமித் ஷா பேசுகையில், “வக்பு சட்டத்தின்படி, கோயில்கள், பிற மதத்தினர், அரசுகள் ஆகியோருக்கு சொந்தமான நிலங்கள் வக்பு சொத்துகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. உதாரணமாக டெல்லியின் லுட்யன்ஸ் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான ஒரு சொத்து வக்பு வசமானது. தமிழ்நாட்டில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான கோயிலுக்கு சொந்தமான சொத்தும் வக்பு சொத்து என அறிவிக்கப்பட்டது. இவற்றுக்கெல்லாம் முடிவு கட்டவே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: வஃக்பு திருத்த மசோதா: சர்ச்சைக்குரிய 5 பிரச்னைகள் என்ன? இஸ்லாமியர்கள் எதிர்ப்பது ஏன்..?
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இடையே நள்ளிரவைத் தாண்டியும் காரசாரமான விவாதம் நடைபெற்றது. அதிகாலை 2 மணி அளவில் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாயின. இதன்மூலம் மசோதா மக்களவையில் நிறைவேறியது. தொடர்ச்சியாக மாநிலங்களவையில் இந்த மசோதா இன்று விவாதிக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: ‘வக்ஃபு திருத்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்’.. காங்கிரஸ் கடும் வேதனை..!