×
 

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்பு சட்டத்திருத்த மசோதா அமல்..! கிரீன் சிக்னல் காட்டிய ஜனாதிபதி..!

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

வக்பு சொத்து நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமை, முழுமையற்ற ஆய்வுகள் மற்றும் வக்ஃபு நிலப் பதிவுகளின் பிறழ்வு, பெண்களின் பரம்பரை உரிமைகளுக்கு போதுமான ஏற்பாடுகள் இல்லாமல் இருத்தல் உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்து வக்பு வாரிய சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்களை கொண்டுவர ஏற்பாடு செய்தது.

வக்ஃபு வாரிய சட்டத் திருத்தங்களில் இஸ்லாமியர்கள் பாதிக்கும் வகையிலும் அவர்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலும் சட்டத்திருத்தம் இருப்பதாக கூறி மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ள எதிர்ப்பு கிளம்பியது. இதனைக் கண்டித்து போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதன்பிறகு பாராளுமன்ற இரு அவைகளிலும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது.

இதையும் படிங்க: வக்பு சட்டத் திருத்தம்.. மசூதிகள், நினைவிடங்களுக்கு பாதிப்பா.? விரிவாக விளக்கிய பாஜக!

12 மணி நேரத் தொடர் விவாதத்திற்கு பிறகு, வக்பு திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில், மசோதாவிற்கு ஆதரவாக 288 உறுப்பினர்கள் வாக்களித்தனர், எதிராக 232 உறுப்பினர்கள் வாக்களித்தனர். மசோதாவிற்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப்பெற்றதால், இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. அதனைத் தொடர்ந்து, மாநிலங்களவையிலும் வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், பெரும்பான்மை வாக்கு கிடைத்ததால் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது.

மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலர் கருப்பு உடையணிந்து அவைக்கு சென்றனர். இந்த மசோதா இஸ்லாமியர்களின் உரிமைகளை பறித்து விடும் என குற்றம் சாட்டி மசோதாவுக்கு எதிராக கோஷமிட்டனர். இந்த நிலையில், வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவேத் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில், பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து இந்த மசோதா சட்டமாகி நடைமுறைக்கு வருகிறது.

இதையும் படிங்க: நீட் எதிர்ப்பை முழுமனதோடு கடைபிடிக்கிறது திமுக அரசு.. திருமா பாராட்டு பத்திரம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share