×
 

தவெகவுக்கு கமல் சொன்ன திடீர் எச்சரிக்கை,  புரிந்துக்கொள்வாரா விஜய்? 

மக்கள் நீதி மய்யத்தின் 8 ஆம் ஆண்டு விழாவில் பேசிய கமல் ஹாசன் சில செய்திகளை தவெக தலைவர் விஜய்க்கு உணர்த்தியுள்ளார். விஜய் அதை உணர்ந்து கடைபிடிப்பாரா? என்ன எச்சரிக்கை பார்ப்போம்.

மக்கள் நீதி மய்யம் கட்சியை கமல்ஹாசன் திடீரென 2017 ஆம் ஆண்டு தொடங்கினார். அவர் கட்சித்தொடங்குவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. வழக்கமாக எல்லோரும் சொல்வார்கள் கட்சி ஆரம்பிப்பவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது என்று. ஆனால் கமல் அதை புறக்கணித்து தான் அதிக ரசிகர்களை வைத்துள்ளோம் அதனால் அரசியலில் வென்று விடுவேன் என முடிவு கட்டி இறங்கினார்.

எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது என்று சொல்லக்காரணம் எம்ஜிஆர் தன் ரசிகர்களை நம்பி மட்டும் கட்சி ஆரம்பிக்கவில்லை. தான் 10 ஆண்டுகாலம் திமுகவில் உழைத்ததை, தனது அனுபவத்தை நம்பி இறங்கினார். கட்சி அரசியலில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த அனுபவம், அரசியல் தொடர்பு எல்லாவற்றிற்கும் மேலாக தனக்கு இருந்த இமேஜ் உள்ளிட்டவற்றை எம்ஜிஆர் பயன்படுத்தினார். அதையும் தாண்டி கடுமையாக உழைத்தார். ஷூட்டிங் நேரம் போக பொதுக்கூட்டங்கள் மூலம் மக்கள் சந்திப்பு, கட்சிக்காரர்கள் சந்திப்பில் அதிக நேரம் ஒதுக்கினார். 

இதையும் படிங்க: 20 ஆண்டுக்கு முன்னால் அரசியலுக்கு வந்திருந்தால் கமல் சாதித்திருப்பாரா?- ஒரு அலசல்

முக்கியமாக ரசிகர்களை மட்டுமே நம்பி அவர் கட்சியை கொண்டுச் செல்லவில்லை.  அதற்கு காரணம் எம்ஜிஆரை ரசித்தவர்கள் தீவிர ரசிகர்கள் பலர் திமுகவில் இருந்தனர். அரசியல் ரீதியாக எம்ஜிஆரை ஆதரிக்கவில்லை. இதை எம்ஜிஆரும் அறிந்திருந்தார். அதனால்தான் பரந்துப்பட்ட மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்கள், திமுகவிலிருந்து வந்தவர்கள் என அனைவரையும் அரவணைத்து சென்றார். கட்சியில் பொறுப்பு கொடுத்தார்.

இந்த உண்மையை நீண்ட ஆண்டுகள் கழித்து கமல் உணர்ந்துள்ளார். இதற்கு 8 ஆண்டுகள் கமலுக்கு பிடித்துள்ளது. ஆனாலும் கமல்ஹாசன் ஒரு விஷயத்தை உணராமல்தான் இன்னும் பேசி வருகிறார். அது உழைக்காமல், மக்களை சந்திக்காமல், ரசிகர்களை அரசியல்.படுத்தாமல் குறிப்பாக யாருக்கு எதிராக அரசியல் செய்கிறோம் என்பதை வெளிப்படுத்தாமல் அரசியலில் உயர முடியாது, எம்ஜிஆர் அதை செய்தார் உயர்ந்தார், அடுத்து வந்த ஜெயலலிதாவும் அதை செய்தார் அதைவிட உயர்ந்தார். இதை அறியாமல் நானும் அரசியலில் இருக்கிறேன் ஆனால் உணரவில்லை என புலம்புவது இப்போதும் அவர் உண்மையை உணரவில்லை என்பதையே காட்டுகிறது. 

ஆனால் கமல்ஹாசன் ஒப்புக்கொண்ட ஒரு உண்மை ரசிகர்கள் எல்லாம் வாக்காளர்கள் அல்ல என்பதே. இதை விஜய்க்கு கமல் உணர்த்தியுள்ளார். இதை விஜய் கடைபிடித்தால், கமல் ஹாசனின் அரசியல் பயணத்திலிருந்து விஜய் பாடம் கற்றுக்கொண்டால் தவெக அடுத்த நிலையை நோக்கி நகரும். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் தோல்விக்கு முக்கிய காரணம் கமல்ஹாசன் அனைத்தும் தன்னை மையப்படுத்தியே இயங்க வேண்டும் என முடிவெடுத்ததும், அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி பார்ட் டைம் அரசியல்வாதியாக நின்றதும் முக்கிய காரணம். 

கமல்ஹாசனிடம் இல்லாத ஓரிரண்டு தகுதிகள் விஜய்க்கு உள்ளது, அது லட்சக்கணக்கான ரசிகர்கள், பெண்கள், சிறுபான்மை மக்கள் ஆதரவு இருக்கிறது. இரண்டாவது விஜய் தனது அரசியல் எதிரி யார் என அடையாளம் காட்டிவிட்டார். ஆனால் செயலில் இறங்கவில்லை. அது கமல்ஹாசனுக்கு மட்டுமல்ல விஜய்க்கும் பின்னடைவை தரும். விஜய் கமல்ஹாசன் வழியா?, எம்ஜிஆரா வழியா? என்பதை தீர்மானிக்க வேண்டும். விஜய் கையில்தான் அந்த முடிவு உள்ளது. வெற்று நம்பிக்கைகள் வெற்றி பெற உதவாது. கடும் உழைப்பும், நேரடி அரசியலும், அன்றாட அரசியலும் மட்டுமே வெல்லும். கமல் கொடுத்த எச்சரிக்கையை ஏற்பாரா விஜய்? பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க: நான் தோற்றுப்போன அரசியல்வாதியா..? கமல் சொன்ன அந்த உண்மை... விஜய் ரசிகர்கள் ஆவேசம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share