மொழிக் கொள்கை பிரச்சனை சாமானிய மக்கள் முதல் பாராளுமன்றம் வரையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மும்மொழி கொள்கையில் விடாப்பிடியாக மத்திய அரசு உள்ள நிலையில், இரு மொழிக் கொள்கை கோட்பாட்டில் தமிழக அரசு இருந்து வருகிறது. இந்த மோதல் போக்கிற்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை.

இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா பேசியுள்ளார். அதில், தேசிய கல்விக் கொள்கையில் ஒரு அம்சம்தான் மும்மொழிக் கொள்கை. தமிழகத்தில் நடைபெறும் ஊழல்களை மறைப்பதற்காக மும்மொழிக் கொள்கை திட்ட எதிர்ப்பை திராவிடக் கும்பல் கையில் எடுத்துள்ளது என்று குற்றம்சாட்டினார். அதற்காக தமிழக மக்களை 1965, 1967-ம் ஆண்டு காலகட்ட மனநிலைக்கு கொண்டு போவதுதான் இவர்களது திட்டம் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வரும்முன் காப்பதும் இல்லை.. பட்டும் திருந்துவது இல்லை.. திமுக அரசை வெளுத்து கட்டிய பழனிசாமி..!

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ரூ.300 கோடி ஊழல், டாஸ்மாக்கில் ரூ.40 ஆயிரம் கோடி ஊழல் இவற்றையெல்லாம் மறைப்பதற்காக தமிழக வாக்காளர்களை மொழி மயக்கத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்று திமுகவினர் நினைப்பதாகவும், ஆனால், காலம் மாறிவிட்டது, மக்கள் விழித்துக் கொண்டுவிட்டனர் என்று கூறினார்.

திமுக-காங்கிரஸின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மும்மொழிக் கொள்கை இருந்தது என்றும் அதாவது, 3-வது மொழியாக இந்தி அல்லது சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும். ஆனால், 2019-ல் பாஜக அரசு, கஸ்தூரிரங்கன் தலைமையில் குழு அமைத்து, அதன் அறிக்கை அடிப்படையில் இந்தி, சம்ஸ்கிருதம் என்று இருந்ததை மாற்றி இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை 3-வது மொழியாகப் படிக்கலாம் என மாற்றினார்கள். பன்முகத்தன்மை பற்றி இவர்களுக்கு அக்கறை இருக்குமானால் இதனை வரவேற்றிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

திமுக-வின் ஊழல் ஆட்சியை ஒழிக்காமல் தமிழன் தலைநிமிர முடியாது என்று திட்டவட்டமாக கூறிய அவர், கலால் வரியில் மட்டும் ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு நடந்துள்ளது எனவும் கூறினார்.

அரசியல் சண்டைகளுக்கு அப்பாற்பட்டு, கொள்கைகளை தாண்டி, அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற வேண்டுமானால், திராவிட மாடல் ஆட்சியை அகற்ற வேண்டும் என தெரிவித்த ஹெச்.ராஜா, எனக்கு தனிப்பட்ட முறையில் எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்றும் தமிழகத்தில் பெரிய அளவில் போதைப் பொருள் புழக்கம் உள்ளது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரேஷன் துறையில் ரூ.992 கோடி ஊழலா..? லிஸ்ட் போட்டு மறுக்கும் அமைச்சர் சக்கரபாணி.!