சென்னை அயனாவரம் வசந்தம் கார்டன் 2-வது லேன் பகுதியை சேர்ந்தபர் குமார். வயது 72. இவர் சென்னை மாநகராட்சியில் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். திமுக தொழிற்சங்கமான எல்.பி.எப். உடன் இணைக்கப்பட்ட தமிழ்நாடு அனைத்து மாநகராட்சிகள் பொது ஊழியர்கள் முன்னேற்ற சங்கம் என்ற தொழிற்சங்கத்தையும் நடத்தி வந்தார்.
இந்த சங்கத்தில் மாநில பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். மேலும் இவர் திமுக முன்னாள் எம்.பி. குப்புசாமியிடம் உதவியாளராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் குமார் தாம்பரத்தை அடுத்த சேலையூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 16-ந்தேதி மகள் வீட்டில் இருந்து தனது வீட்டிற்கு திரும்பினார்.

மகள் வீட்டில் இருந்து ஆட்டோவில் புறப்பட்ட குமார், தாம்பரம் பஸ் நிலையத்தில் இறங்கிய நிலையில், அதன் பிறகு காணாமல் போய்விட்டார். பல இடங்களில் தேடியும் தந்தை கிடைக்காததால், அவரது மகள் தாம்பரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தாம்பரம் உதவி கமிஷனர் நெல்சன் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாயமான குமாரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குமாருக்கும் சேலையூர் பகுதியில் வசித்து வரும் ரவி என்பவருக்கும் இடையே நில பிரச்சனை இருந்து வந்தது தெரிந்தது.
இதையும் படிங்க: இந்தியாவிலேயே இந்த மாநிலத்தில்தான் கிரிமினல் வழக்குகள் அதிகம் உள்ள எம்.எல்.ஏ.க்கள்... ஆய்வில் திடுக்..!!

இதைத்தொடர்ந்து போலீசார் ரவியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது குமாரை காரில் கடத்தி கொலை செய்ததாக ரவி தெரிவித்ததுள்ளான். தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து ரவியும் அவரது கூட்டாளிகள் 7 பேரும் குமாரை காரில் கடத்திச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். செஞ்சி அருகே உடலை குழி தோண்டிபுதைத்துள்ளனர். இவை அனைத்தும் ரவியிடம் போலீசார் நடத்தியை விசாரணையில் வெளியே வந்துள்ளது. இதையடுத்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக ரவி உள்பட 7 பேரிடம் போலீசார் மேற்கொண்ட அதிரடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

மும்பையில் வசித்து வரும் குமாரின் உறவுக்கார பெண்ணான மகாலட்சுமி என்பவருக்கு முத்தண்டியில் ஒரு கிரவுண்ட் நிலம் சொந்தமாக உள்ளது. மகாலட்சுமி மும்பையில் உள்ளதாக இந்த நிலத்தை குமார் தான் பாதுகாத்து வந்துள்ளார். இதன் தற்போதைய மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் நிலையில், அந்த இடத்தை ரவி தனது கள்ளக்காதலியான தனலட்சுமி என்ற பெயரில் போலியாக பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மகாலட்சுமி என்ற பெயரில் போலியாக ஒரு பெண்ணை தயார் செய்த ரவி, அவர் மூலம் தனது கள்ளக்காதலியான தனலட்சுமி பெயரில் இடத்தை பதிவு செய்துள்ளான். இது குமாருக்கு தெரிந்து, இது தொடர்பாக ரவியிடம் தட்டிக் கேட்டுள்ளார். குமாரிடன் ஒரிஜினல் பத்திரம் இருப்பதை அறிஅந்த ரவி, அதற்காக குமாரை கடத்திச் சென்றுள்ளான். நிலத்துக்கான ஒரிஜினல் ஆவணங்களை கேட்டு காரில் வைத்தே தாக்கியுள்ளான். இதற்கு குமார் உடன்படாததால் அவரை காருக்குள் வைத்து கழுத்தை நெரித்து கொடூரமாக கொன்றுள்ளான்.

பின்னர் கொலையுண்ட குமாரின் உடலுடன் செஞ்சிக்கு கொண்டு சென்று அங்கே, காட்டுப்பகுதியில் பெரிய குழியை தோண்டி குமாரின் உடலை போட்டு புதைத்துள்ளனர். பின்னர் எதுவும் தெரியாது போல ரவி வெளியில் நடமாடியுள்ளார். ஆனால் போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தி ரவியையும் அவரது கூட்டாளிகளையும் பிடித்து உள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வுபெற்ற குமார் தி.மு.க. தொழிற்சங்கத்தினர் மத்தியில் நன்கு அறிமுகமானவராவார். இவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தி.மு.க.வினர் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலை வழக்கில் கைதாகியுள்ள ரவி பட்டதாரி வாலிபர் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் 59% எம்.எல்.ஏ-கள் மீது கிரிமினல் வழக்குகள்: திமுகவில் மட்டும் 98 பேர்..!