சென்னை திருவான்மியூரில் நேற்று நடைபெற்ற பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவியும் இருக்க வேண்டும், அண்ணாமலையும் இருக்க வேண்டும் என்று பேசியுள்ளது வாய்க்கொழுப்பு என்று கூறி இருந்தார். திமுகவில் தான் மு.க.ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி, அவருக்குப் பிறகு இன்பநிதி என்று துண்டு போட்டுள்ளதாகவும் அண்ணாமலை விமர்சித்தார். ஆனால், பாஜகவில் தன்னால் தொடர்ந்து தலைவராக இருக்க முடியாது என்றபோதிலும், அண்ணா அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுக்கும் வரை ஓயப்போவதில்லை என்றார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலையால் அண்ணா அறிவாலயத்தில் உள்ள செங்கல்லை அல்ல, ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது என்று காட்டமாக கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும் என்ற கற்பனையில் மிதந்து வருகிறார் அண்ணாமலை, அவரது கற்பனை ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 7,360 கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது?... தமிழக அரசுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி...

மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய் பேசியதாக அண்ணாமலை கூறியது முற்றிலும் தவறு என்றார். கூடவே தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி குறித்து ஒரே மேடையில் விவாதிக்க அண்ணாமலை தயாரா என்றும் ஆர்.எஸ்.பாரதி சவால் விடுத்தார். ஏற்கனவே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திமுக ஆதரவாளர் போஸ் வெங்கட் ஆகியோர் அண்ணாமலைக்கு எதிராக ஆவேசமாக பேசியுள்ள நிலையில், இப்போது ஆர்.எஸ்.பாரதியும் காட்டமான பதிலளித்துள்ளார்.
இதையும் படிங்க: ராணிப்பேட்டை காந்தி ஊழலின் உறைவிடம்.. பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறை தண்டனை நிச்சயம்..! அண்ணாமலை ஆவேசம்