மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை பயணத்தின் ஒரு பகுதியாக கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியானது. அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்து அமித்ஷா அறிவித்தார். இந்த கூட்டணி தொடர்பாக பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கொத்தடிமை கூடாரம் என்றும் ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்துவிட்டதாகவும் விமர்சித்து இருந்தார். அதிமுக பாஜக கூட்டணியே தோல்வி தான் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை வறுத்தெடுக்கும் விதமாக தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார். பல கோடிகளை கொட்டிக் கொடுத்து, சில கட்சிகளை அடிமைகளாக விலைக்கு வாங்கி, அவர்கள் தயவால் ஆட்சி அமைத்து, பல்லாயிரம் கோடிகளை கொள்ளை அடித்துள்ள ஊழல் பணத்திற்கு ஆப்பு அடிக்கும் விதமாக சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதால், ஸ்டாலின் அலறித் துடிப்பதாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கு இதுதாங்க காரணம்.. மாஜி அமைச்சர் வைகைச்செல்வன் ஒரே போடு.!

பா.ஜ.க. புகுந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டியே தமிழக மக்களை ஏமாற்றி கடந்த நான்கு ஆண்டுகளாக, நிர்வாகத் திறனற்ற ஆட்சியை பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வந்துள்ளதாகவும், தற்போது கச்சத்தீவு, தொகுதி மறுசீரமைப்பு, நீட் விவகாரம் என்று தமிழக மக்கள் இதுவரை அனுபவித்து வந்த சிரமங்களை மடைமாற்ற முயலும் விடியா திமுக-வின் முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக தலைமையிலான கூட்டணி தொடர்பாக புலம்பல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் வல்லமை பெற்றது தி.மு.க. என்று நீதியரசர் சர்க்காரியாவால் சான்றிதழ் பெற்ற கூட்டம் என்றும் வீராணம் திட்ட ஊழல், பூச்சி மருந்து ஊழல், அரிசி பேர ஊழல், சர்க்கரை பேர ஊழல், கோடம்பாக்கத்தில் இருந்த அரசு ஆதிதிராவிட மாணவர் விடுதியை தனியார் ஒருவருக்கு விற்று, பின்னர் அவரிடமிருந்து தி.மு.க. கட்சி பத்திரிகை பெயருக்கு மாற்றிய ஜகஜால ஊழல் என்று சர்க்காரியா கமிஷன் பட்டியலிட்டதை தமிழக மக்கள் மறந்துவிட முடியுமா என கேள்வி எழுப்பினார்.

அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, CBI வழக்குகளில் இருந்து தப்பியதை தமிழக மக்கள் மறந்துவிடுவார்களா என்றும் அந்த ரெய்டுக்கு பயந்து 63 சீட்டுகளை காங்கிரசுக்குக் கொடுத்து, கொத்தடிமை சாசனம் எழுதி, சாஷ்ட்டாங்கமாக காலில் விழுந்ததைத்தான் மறக்கமுடியுமா எனவும் கூறினார்.

அன்று முதல் இன்று வரை, காங்கிரஸ் காலடியில் இருந்து எழும் துணிச்சல் இல்லாத புல் தடுக்கி பயில்வான் ஸ்டாலின், எங்களைப் பார்த்து ஏகடியம் பேசுவது கண்டு மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள் என்று விமர்சித்த எடப்பாடி பழனிச்சாமி, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியே ஊழல் என்ற ஒரு பெரிய கண்டுபிடிப்பை, ஊழலுக்கும், ஊழலுக்காவும் பிறந்த இந்த மாமேதை வெளியிட்டிருப்பது வேடிக்கை என சரமாரியாக சாடினார். மேலும், 2026, சட்டமன்றப் பொதுத் தேர்தலில் இந்த கொள்ளைக் கும்பலுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தலையாட்டி பொம்மை யோக்கியதை.. முதல்வர் சொன்னா கோபம் வருதோ.? இபிஎஸ்-ஐ கதறவிடும் அமைச்சர் ரகுபதி!