தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் வழங்குவதாக எப்போது சொன்னோம்? என எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்த நிலையில், மறைந்த விஜயகாந்தின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு பதிவு அரசியல் கவனம் பெற்று வருகிறது.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூறி வந்த நிலையில், ''தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக நாங்க எப்போது சொன்னோம்?''எடப்பாடி பழனிசாமி என பேசியது தேமுதிகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

அதிமுக தலைமையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கப்பட்டது. அதில் பாமகவிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், உடன்பாடு ஏற்படாத நிலையில் பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது. இதே போல அதிமுக கூட்டணியில் இடம்பெற தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் திமுக கூட்டணியிடம் அதிமுக தோல்வியை தழுவியது.
இதையும் படிங்க: எடப்பாடியாரின் கூட்டணிப்பேச்சு… 'இது தேவை இல்லாத விஷயம்..' அலட்சியப்படுத்திய அண்ணாமலை..!
இந்த நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா பதவியிடங்களுக்கு இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த வகையில் தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் ஒதுக்குவதாக அதிமுக வாக்குறுதி கொடுத்தாக தகவல் வெளியானது. இது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறுகையில், "கூட்டணி அமைத்த போதே கையெழுத்திடப்பட்டு உறுதி செய்யப்பட்டது. ராஜ்யசபா தேர்வுக்கான நாள் வரும்போது, தேமுதிக சார்பாக யார் ராஜ்யசபா செல்ல உள்ளார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கூட்டணி தொடர்பாக பல்வேறு தகவல்களை தெரிவித்திருந்தார். தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் வழங்க இருப்பதாக வெளியான தகவல் தொடர்பான கேள்விக்கு ''தே.மு.தி.க-விற்கு மாநிலங்களவை சீட் கொடுக்கப்படும் என்று நாங்கள் கூறினோமா? மற்றவர்கள் கூறுவதன் அடிப்படையில் என்னிடம் கேள்வி எழுப்பாதீர்கள்" என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக எப்போது கூறினோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியது பற்றிய கேள்விக்கு, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எந்தப் பதிலும், அளிக்காமல் சென்றார். 
இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் என்கிற எக்ஸ்தள கணக்கில், “சத்தியம் வெல்லும், நாளை நமதே..!” என பதிவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்து வரும் தேமுதிக ஆதரவாளர்கள், ''மீண்டும் ஒரு துரோகம் அரங்கேறி உள்ளது. தேமுதிகவிற்கு ராஜ்ய சபா சிட்டு இல்லை அதிமுக தகவல். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் 7 சதவீத வாக்கு, தேமுதிக வாக்கு என்பதை எடப்பாடி பழனிச்சாமி உணர வேண்டும்'' எனக் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: நாளை வரை டைம் கேட்ட அண்ணாமலை... அதிமுக, பாஜக கூட்டணிக்கு விஜய் எதிர்ப்பா?