ஆளுநர் ஆர்.என், ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு.. வேகம் காட்டும் திமுக அரசு!
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய இடையூட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே பல்வேறு விஷயங்களில் மோதல் போக்கு முடிவுக்கு வராமல் நீடித்துகொண்டே செல்கிறது. அதில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க தேடுதல் குழுவை அமைப்பதும் ஒன்று. அந்தத் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானிய குழுவின் உறுப்பினரையும் சேர்க்க வேண்டும் எனத் ஆளுநர் ஆர்.என். ரவி அழுத்தம் கொடுத்து வருகிறார். இதை ஏற்க தமிழக அரசு மறுத்து வருகிறது.
இந்நிலையில் ஆளுநரின் இந்தச் செயல் விதிமுறைகளுக்கு எதிரானது எனக் கூறி, ஆளுநர் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தது. ஆனால், இந்த மனு மீதான விசாரணை நடைபெறவில்லை. இந்தச் சூழலில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், "சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் துணைவேந்தர்களின் பதவி காலம் 2024 ஆகஸ்ட், நவம்பர் மாதங்களில் முடிவுக்கு வந்துவிட்டது. இதேபோல திருச்சி பாரதிதாசன், சேலம் பெரியார் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் பணி நீட்டிப்புக் காலம் வரும் பிப்ரவரி, மே மாதங்களுடன் நிறைவுக்கு வருகிறது.
இதையும் படிங்க: கோயம்பேட்டில் ஒரு டைடல் பார்க்.. தமிழக அரசின் அசத்தல் ப்ளான்...
இந்தப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு தேடுதல் குழுவை அமைத்தது. இச்சூழலில், ஏற்கனவே செய்தது போலவே பல்கலைக்கழக மானிய குழுவின் உறுப்பினரை இந்தக் குழுவில் சேர்க்க வேண்டும் என்று ஆளுநர் ரவி மீண்டும் அறிவுறுத்தி வருகிறார். ஏற்கனவே இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, மீண்டும் ஆளுநரின் புதிய அறிவுறுத்தல் விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே, இந்த விவகாரத்தில் மூல வழக்கை விசாரிக்கும்போது, இதையும் கருத்தில் கொண்டு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்." என்று தமிழக அரசு மனுவில் கூறியுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு ஆணவம் விமர்சனம்.. ஆளுநரை கண்டுகொள்ளாத பெருந்தலைகள்.. பொங்கி எழுந்த திமுக எம்.பி!