×
 

தமிழை விட சமஸ்கிருதமே பழமையான மொழி.. பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே சர்ச்சைப் பேச்சு..!

தமிழை விட சமஸ்கிருதமே பழமையான மொழி என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கூறியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வின் முதல்நாளிலேயே மொழிப்பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை, மும்மொழி விவகாரம், கல்விக்கான நிதி மறுப்பு ஆகிய விவகாரங்களை எழுப்பி தமிழக எம்.பி.க்கள் மத்திய அரசை கேள்விக்கணைகளால் துளைத்தனர். பதிலுக்கு பேசிய அவர்கள், எரிகிற தீயில் மேலும் கொஞ்சம் எண்ணெய்யை கொட்டியது போல் ஆக்கிவிட்டுள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா எம்.பி.யான நிஷிகாந்த் துபே பேசும்போது, தமிழை விட சமஸ்கிருதமே பழமையான மொழி என்றார். அதனால் தான் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் கோயில்களில் சமஸ்கிருத மொழியில் பூஜை செய்கின்றனர் என்ற அவரது பேச்சு தமிழ்நாட்டில் புதிய அனலைக் கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க: அவதூறுகளை அள்ளி கொட்டறது தான் இவங்களுக்கு வேலை… திமுகவை விளாசிய எல்.முருகன்!!

நிஷிகாந்த் துபேவுக்கு சில விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டி உள்ளது. அவற்றை சுருக்கமாக பார்க்கலாம்.

ஒரு மொழி உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கு அது மக்கள் பயன்பாட்டில் உள்ளதா? என்பதே முதல் அளவுகோல். அந்தவகையில் மொழிவாரியாக பிரிக்கப்பட்ட இந்தியாவில் எந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாகவும் சமஸ்கிருதம் இல்லை என்பதே உண்மை. அப்படியெனில் பொது சமூகத்தில் வணிக பயன்பாட்டிற்கோ, கல்வித்துறையிலோ, புழங்கு மொழியாகவே சமஸ்கிருதத்தை யாரும் பயன்படுத்தவில்லை என அறிய முடிகிறது. மாறாக தமிழ் என்பது ஒரு மாநிலத்தின் ஆட்சிமொழி. 2010 வரை அரியானாவின் இரண்டாவது ஆட்சிமொழி தமிழ்.. 

இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா ஆகிய 3 நாடுகளில் தமிழ் ஆட்சிமொழி. மொரிஷீயஸ், பிஜித் தீவுகள், கனடா, பிரிட்டன், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் தமிழ் ஒரு பாடமாக கற்றுத்தரப்படுகிறது. 154 நாடுகளில் தமிழர்கள் வசிக்கின்றனர். சிங்கப்பூர், மொரிஷியஸ் ஆகிய நாடுகளின் குடியரசுத் தலைவர்கள் தமிழர்கள்..  மிஸ்டர் நிஷிகாந்த் துபே, சமஸ்கிருதம் பற்றி இப்படி ஒரு பட்டியல் சொல்ல முடியுமா?...

அடுத்து... உலகின் 7 செம்மொழிகள் என்று ஐக்கிய நாடுகள் சபை 7 மொழிகளை பட்டியலிட்டுள்ளது. அதில் முதல்மொழி எது தெரியுமா நிஷிகாந்த் துபே... செம்மொழியான தமிழ்மொழியே முதல்மொழியாம்... இரண்டாவது தான் சமஸ்கிருதம்.. சர்வதேச சட்டாம்பிள்ளையான ஐநாவே தமிழை முதன்மைப்படுத்தி பேசும்போது, நீங்கள் எந்த அளவுகோலில் சமஸ்கிருதம் பழமையான மொழி என்று அளந்துவிடுகிறீர்கள் என்று அறிந்து கொள்ளலாமா?... 

அடுத்து... கோயில்களில் சமஸ்கிருதத்தில் பூஜை செய்யப்படுகிறது என்று திருவாய் மலர்ந்து அருளியுள்ளீர்கள்.. ஈராயிரம் ஆண்டுகால தமிழ் இலக்கிய நெடும்பரப்பின் சிறிய வரலாற்றை தெரிந்து கொள்வது நலம் பயக்கும். கிமுவுக்கு முன்பாக சங்க இலக்கிய காலம், கிபிக்கு பின் நீதி இலக்கிய காலம், பிறகு காப்பிய காலம், அதன்பிறகு பக்தி இலக்கிய காலம், இதனைத்தொடர்ந்து உரைநூல்களும், பொது இலக்கியமும், 18-19-ம் நூற்றாண்டுகளில் கிறித்தவ இலக்கியம் மற்றும் இஸ்லாமிய இலக்கிய காலம், 20-ம் நூற்றாண்டில் கட்டுரை, சிறுகதை, புதுக்கவிதை.. 21-ம் நூற்றாண்டில் அறிவியல் தமிழ், இப்போது கணினித் தமிழ்.. இதில் எங்குமே சமஸ்கிருதத் தமிழ் என்று ஒன்று இல்லவே இல்லை. கோயில்களை ஒருசிலர் ஆக்ரமித்துக் கொண்டு அவர்களுக்கு தெரிந்த மொழியில் பூசனை என ஒன்றை செய்கிறார்கள் என்பதற்காக சமஸ்கிருதம் உயர்ந்தது என்பதை பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்று சொல்வதற்கு ஒப்பானது. தேவாரத்தை விடவா, திருவாசகத்தை விடவா, திருப்பாவையை விடவா, திருவெம்பாவையை விடவா, திருமந்திரத்தை விடவா மேலான பூசனைச் சொற்கள் வேற்று மொழியில் இருந்து விட போகின்றன. தமிழை பொன்னம்பல மேடையில் ஏற்றுவதற்கு தடை விதிப்பவர்கள் யார் என்று நீங்களே சொல்லுங்கள் நிஷிகாந்த் துபே அவர்களே...

உங்களுக்கு ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறோம்.. 

தாயின்மேல் ஆணை, தந்தையின்மேல் ஆணை
தமிழகம் மேல்ஆணை
தூயஎன் தமிழ்மேல் ஆணையிட்டே நான்
தோழரே உரைக்கின்றேன்
தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனைஎன்
தாய்தடுத் தாலும் விடேன்
எமை நந்துவாயென எதிரிகள் கோடி
இட்டழைத் தாலும் தொடேன்

என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் வரிகளை தமிழ்தெரிந்த ஜார்கண்ட்காரர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் நிஷிகாந்த் துபே அவர்களே...

இதையும் படிங்க: இந்தி எதிர்ப்பு போராட்டம்.. வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு சென்றால்... எச்சரிக்கும் தொழில் அமைப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share