×
 

திமுக அரசை அகற்றணும்.. கூட்டணியிலிருந்து வெளியே வாங்க.. சிபிஎம், விசிகவுக்கு பாஜக பகிரங்க கோரிக்கை!

திமுக அரசை அகற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் எதிரணியில் இருக்க வேண்டும் என்று பாஜக மாநில துணை தலைவர் கே.பி. ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

பாஜக துணை தலைவர் கே.பி. ராமலிங்கம் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், " உத்தராகண்டில் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய நாள் ஜனநாயக வரலாற்றில் புனிதமான நாளாக கருதப்படுகிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் பொது சிவில் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பாலின வேறுபாடு அற்ற நிலையை உருவாக்குவதுதான் பொது சிவில் சட்டத்தின் நோக்கம். ஒவ்வொரு மதம், சாதிக்கு எனப் பாகுபாடின்றி இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம்தான் இந்தப் பொது சிவில் சட்டம் ஆகும்.

உத்தராகண்ட் மாநிலத்தைப் போலவே, தமிழகத்திலும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழக முதலமைச்சர் பொது சிவில் சட்டத்தை வரவிருக்கும் நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரிலேயே சட்டப் பேரவையில் அறிவிக்க வேண்டும்.
ஆனால், வாக்கு வங்கிக்காக அவர் போராடுவதெல்லாம் வெளி வேஷம், நாடகம்தான். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு சரியாக செயல்படவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக அரசு இறுதி அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. திமுக கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் சிபிஐ விசாரணை தேவை என வலியுறுத்தி உள்ளனர். இவர்களுக்கு தமிழக காவல்நிலை துறை மீது நம்பிக்கை இல்லை.



கடந்த காலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் எந்தக் கட்சியுடன் கூட்டணியில் இருந்தாலும் நாட்டு மக்களின் நன்மைக்காக சட்டப்பேரவையில் நியாயமான முறையில் போராடி வந்துள்ளனர். இடையில் அவர்களின் ஜனநாயக முறையிலான பேச்சு தடைபட்டிருந்தது. தற்போது அக்கட்சிகள் வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரியிருப்பதை பாஜக வரவேற்கிறது. அதேநேரத்தில், மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுக அரசை அகற்ற வேண்டும். இதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் எதிரணியில் இருக்க வேண்டும் என்பது பாஜகவின் கோரிக்கை.

இதையும் படிங்க: சிபிஐ விசாரணை தேவையில்லை.. இதைப் பண்ணாலே போதும்.. வேங்கைவயல் வழக்கில் விஜய் புது ஐடியா.!

சீமான் சேரவேண்டிய இடத்தில் சேர்ந்து விட்டதால் பெரியாரை இகழ்ந்து பேசுகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறுகிறது.  நான் 30 ஆண்டுகள் திமுகவில் பயணித்தவன்.  பெரியாரைப் பற்றி மேடைகளில் நிறைய பேசியிருக்கிறேன். ஆனால், அப்போதுகூட இந்த மண்ணை பெரியார் பூமி என்றெல்லாம் சொல்லியதில்லை. இந்த மண்ணுக்கு கிடைக்கும் வரலாறு என்பது இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்த மாமனிதர்களின் வாழ்க்கைதான். நம் மண்ணுக்கான உண்மையான வரலாறு என்பது ஆன்மிகம்தான். தேசியமும், ஆன்மிகமும் தான் இந்த மண்ணின் அடிப்படை. தமிழகம் நீரு பூத்த நெருப்பாக இருந்தாலும் என்றைக்கும் தேசியத்தையும், தெய்வீகத்தையும் ஒட்டுமொத்தமாக அழித்து விட முடியாது. தேசியம் மற்றும் தெய்வீகம் என்ற நெருப்புத் துண்டின் மீது போர்த்தப்பட்டுள்ள திராவிடப் போர்வை விரைவில் எரிந்து சாம்பலாகும்'' என்று கே.பி. ராமலிங்கம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுக ஒரு நாடக கம்பெனி.. கருணாநிதியை மிஞ்சும் திரைக்கதை.. திமுக அரசை டாராகக் கிழித்த அண்ணாமலை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share