டெல்லி தேர்தலில் காங்கிரஸ் - பாஜக ரகசிய கூட்டணி: அம்பலப்படுத்துகிறார், கெஜ்ரிவால்
டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரசும் பாஜகவும் ரகசிய கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் தாக்குதல் தொடுத்திருக்கிறார்.
பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற இருக்கும் டெல்லி சட்டசபை தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மோதுவதால் கடுமையான மும்முனை போட்டி நிலவுகிறது.
"இந்தியா கூட்டணி"யில் இடம் பெற்றிருந்த முக்கிய எதிர்க்கட்சிகள் இந்த தேர்தலில் ஆம் ஆத்மியை ஆதரிக்கின்றன. இதனால் காங்கிரஸ் தனித்து விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெல்லி தேர்தலில் காங்கிரசும் பாஜகவும் திரை மறைவில் ரகசிய உடன்பாடு வைத்திருப்பதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதையும் படிங்க: ரூ. 2 ஆயிரம் கோடி இழப்பு: சிஏஜி அறிக்கை விவகாரத்தில் 'ஆம் ஆத்மி அரசு'க்கு டெல்லி உயர் நீதிமன்றம் 'குட்டு'
இது குறித்து அவர், "இன்று ராகுல் காந்தி டெல்லி வந்திருக்கிறார். அவர் எனக்கு எதிராக அவதூறுகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். ஆனால் அவருடைய கருத்துக்களுக்கு நான் பதிலளிக்க போவதில்லை. அவர் காங்கிரசை காப்பாற்ற போராடுகிறார்; நான் இந்த நாட்டை காப்பாற்ற போராடுகிறேன்" என்று தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
கெஜ்ரிவாலின் இந்த குற்றச்சாட்டுக்கு பாஜக தலைவர்களில் ஒருவரான அமித் மாளவியா பதிலளித்திருக்கிறார். " இந்த நாட்டுக்காக நீங்கள் கவலைப்படுவதை பின்னால் பார்த்துக் கொள்ளலாம்; முதலில் உங்கள் புது டெல்லி தொகுதியை காப்பாற்றி, தக்க வைத்துக்கொள்ள பாருங்கள்" என்று அவர் பதிலடி கொடுத்திருக்கிறார்.
அவரை திருப்பி அடித்த கெஜ்ரிவால், "ஓ அப்படியா விஷயம்! நான் ராகுல் காந்தியை பற்றி ஒரு வரி சொன்னால், பாஜகவிடமிருந்து அல்லவா பதில் வருகிறது. பாஜக எந்த அளவுக்கு குழப்பத்தில் இருக்கிறது என்பதை பாருங்கள். ஒருவேளை இந்த டெல்லி தேர்தல் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் பல ஆண்டுகளாக திரை மறைவில் ரகசிய கூட்டு இருந்ததை அம்பலப்படுத்தலாம் என்றார்.
"ஒட்டிப்பிறந்த இரட்டையர்" (ஜூகல்பந்தி) என்ற வார்த்தையை கெஜ்ரிவால் இதற்காக பயன்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக தாக்குதல் தொடுத்த ராகுல் காந்தி, "ஊழலை ஒழிப்பது பற்றி கெஜ்ரிவால் பேசி வருகிறார். டெல்லியில் அவர் ஊழலை ஒழித்து இருக்கிறாரா?. பிரதமர் மோடி பொய்யான வாக்குறுதிகளை அளித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கெஜ்ரிவாலும் அதே பாணியை பின்பற்றுகிறார். சுற்றுச்சூழல் மாசு, ஊழல் மற்றும் பணவீக்கம் டெல்லியில் உயர்ந்து வருகிறது" என்றார்.
காங்கிரசும் ஆம் ஆத்மி கட்சியும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருந்தன ஆனால் தற்போது இந்த கூட்டணி உடைந்து பெரும்பாலான கட்சிகள் வெளியேறிவிட்டன. அவைகளில் அகிலேஷ் சிங்காதவ் மம்தா பானர்ஜி ஆகியோர் தலைமையிலான முக்கிய கட்சிகள் டெல்லி தேர்தலில் கெஜ்ரிவாலை ஆதரிப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டெல்லியில், வேலையில்லாத படித்த இளைஞர்களுக்கு மாதம் ரூ.8,500: காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி!