வாக்காளர் அடையாள அட்டை - ஆதார் இணைப்பு.. முக்கிய முடிவெடுத்த தேர்தல் ஆணையம்.. எச்சரிக்கும் காங்கிரஸ்.!!
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தை எச்சரித்துள்ளது.
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையுடன் (இபிஐசி) ஆதாரை இணைப்பது தொடர்பாக யுஐடிஏஐ-யின் சிஇஓ, உள்துறை செயலர், சட்ட செயலர், தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் இரு தினங்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இபிஐசி-ஐ ஆதாருடன் இணைப்பதற்கான மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 326, இது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி ஆலோசிக்கப்பட்டது.
இதன் அடிப்படையின் கீழ் வாக்காள அட்டை - ஆதார் எண் இணைப்பு நடவடிக்கையை மேற்கொவதென முடிவு எடுக்கப்பட்டது. என்றாலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு என்பது தன்னார்வ நடவடிக்கையாகவே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே, தன்னார்வ அடிப்படையில் இதனை 65 கோடி பேர் இணைத்துள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. அக்கட்சி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "மகாராஷ்டிராவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற ஏராளமான குளறுபடிகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் ஏற்கெனவே பலமுறை காங்கிரஸ் புகார் அளித்தது. இரண்டு பட்டியலில் இருந்த வாக்களார் எண்ணிக்கையும் ஒத்துப்போகவில்லை.
இதையும் படிங்க: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு: கட்டாயமாக்கும் தேர்தல் ஆணையம்..!
காங்கிரஸ் கட்சியின் தொடர் புகாரால்தான் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆனாலும், தகுதியான ஒரு இந்திய குடிமகன்கூட வாக்களிக்கும் உரிமை இழந்துவிடக் கூடாது. இதைத் தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். அதேநேரத்தில் எந்தவொரு குடிமகனின் தனியுரிமையும் மீறப்படக் கூடாது" என்று தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் கட்சி எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகள் மாநாடு! புது முயற்சியுடன் களமிறங்கும் தேர்தல் ஆணையம்.