×
 

டெல்லி பயணம் இதுக்குதான்... ரகசியத்தை போட்டுடைத்த எடப்பாடி!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றதற்கான காரணம் குறித்து தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகளில் பாஜகவும் ஒன்று.  பின்னர் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. இதற்கு பின்னர் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், வலுவான கூட்டணியுடன் இருந்த தி.மு.க. 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஆனால் அதிமுக மற்றும் பாஜக தனி தனியாக தேர்தலை சந்தித்ததால் அவர்கள் இருவரும் ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதை அடுத்து எதிர்வர இருக்கும் சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜகவை இணைக்கும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

மேலும் பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை ஆரம்பித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சில் பிரதிபலிக்கிறது என்றே சொல்லலாம். முதலில் இனி எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்றவர் தற்போது எங்களுக்கு ஒரே எதிரி திமுக-தான் என்கிறார். இதன்மூலம் அதிமுக - பாஜக கூட்டணி விரைவில் உறுதியாகும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டது தமிழக அரசியலில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: அதிமுகவில் மீண்டும் OPS, சசிகலா? எடப்பாடியின் அடுத்த நகர்வு!

இதற்கு முன்பு அவர் டெல்லி சென்றபோது அவரது, பயண விவரம் முன்கூட்டியே தெரிய வரும். ஆனால், இன்றைய பயணம் கடைசி நேரத்திலேயே தெரிய வந்ததாக கூறப்படுகிறது. மேலும் எடப்பாடி டெல்லி சென்றது குறித்து சட்டசபையிலும் பேசப்பட்டது. இதுக்குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், எதிர்க்கட்சி தலைவர் யாரை சந்திக்க செல்கிறார் என்று தெரியும். அவர் சந்திக்கும் நபரிடம் இருமொழி கொள்கையை வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

இதுஒருபுறம் இருக்க மறுபுறம் டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசியுள்ளார். இதனால் எடப்பாடி பழனிசாமியும் அவரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டெல்லி சென்ற எடப்பாடி, அதற்கான காரணம் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், கடந்த மாதம் திறக்கப்பட்ட அதிமுக அலுவலகத்தை பார்வையிட வந்தேன் என்றார். அவரை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் டெல்லி செல்கிறார். இதனால், டெல்லியில் நடப்பது என்ன? அடுத்தடுத்து டெல்லி செல்வதற்கான காரணம் என்ன? என பல கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன. இதனால் தமிழக அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது.  

இதையும் படிங்க: சவால்களை எதிர்கொண்ட சுனிதா, வில்மோருக்கு ராயல் சல்யூட்..! புகழ்ந்து தள்ளிய இபிஎஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share