அவுரங்கசீப்பை புனிதப்படுத்துபவர்கள் ‘துரோகிகள்’.. தீயில் நெய்வார்த்த மகாராஷ்டிரா துணை முதல்வர் பேச்சு..!
அவுரங்கசீப்பை புனிதப்படுத்துவோர் துரோகிகள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.
முகலாய மன்னர் அவுரங்கசீப்பை புனிதப்படுத்துவோர் துரோகிகள். இந்த மாநிலத்துக்கு அவுரங்கசீப் எண்ணற்ற அட்டூழியங்களைச் செய்துள்ளார் என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
அவுரங்கபாத்தில் (சத்ரபதி சாம்பாஜி நகர்) உள்ள முகலாயமன்னர் அவுரங்கசீப் கல்லறையை மாநிலத்தை விட்டு வேறு இடத்துக்கு அப்புறப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி விஸ்வ இந்து பரிசத், பஜ்ரங் தளம் தொண்டர்கள் நேற்று நாக்பூரில்பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, மற்றொரு தரப்பினரும் போராட்டம் நடத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதையும் படிங்க: அவுரங்கசீப் சமாதியை இடிக்க கோரி போராட்டம்.. போர்க்களமான நாக்பூர்.. திரைப்படத்தால் எழுந்ததா சர்ச்சை..?
பாரதிய நாகரிக் சுரக்ஸா சன்ஹிதா சட்டத்தின் கீழ் 163 பிரிவில் மாநிலத்தில் கோட்வாலி, கணேஷ்பேட், லகாட்கானி, பச்போலி, சாந்திநகர், சகர்தாரா, நந்தவனம், இமான்வாடா, யசோதாநகர், கப்லிநகர் ஆகியவற்றில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கலவரத்தை மேலும் தூண்டிவிடும் வகையில் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தானே நகரில் சிவ ஜெயந்தி நிகழ்ச்சியில் நேற்று நடந்தது, இதில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்று சத்ரபதி சிவாஜி சிலையை திறந்துவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மகராஜ் புனிதமான சக்தி, தியாகம், இந்துத்துவா ஆகியவற்றுக்காக போராடியவர். சிவாஜி மகராஜ் இந்துத்துவாவின் அடையாளம் மட்டுமல்ல, இந்தியர்களின் கவுரவம். ஜனநாயகத்தையும் கண்டுபிடித்தவர்.
மகாராஷ்டிராவில் முகலாய மன்னர் அவுரங்கசீப் ஏராளமான அட்டூழியங்கள் செய்துள்ளார், சத்ரபதி சிவாஜியின் மகன், சம்பாஜி மகராஜை தூக்கிலிட்டு கொன்றார்.மராட்டியத்தை கொள்ளையடிக்கத்தான் அவுரங்கசீப் வந்தார். ஆனால், அங்கு சக்திவாய்ந்த மன்னர் சிவாஜியை எதிர்கொள்ள வேண்டியதிருந்தது. அவுரங்கசீப்பை இன்னும் புகழ்ந்து பாடுபவர்கள், வேறுயாருமல்ல துரோகிகள். சத்ரபதி சிவாஜி ஒருங்கிணைந்த இந்தியாவின் பெருமை, இந்துத்துவாவின் அடையாளம். தொலைக்குள்ள தலைவர், நீதியை ஊக்கப்படுத்திய தலைவர், சாமானியர்களின் மன்னர் சிவாஜி.
சிவாஜி மகராஜாவிடம் இருந்த குணங்களில் ஒன்றையாவது மக்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும், இதுதான் நாம் அவருக்குச் செய்யும் அஞ்சலியாக இருக்கும். சிவாஜி சிலை திறக்கப்பட்ட பகுதி இனிமேல், சத்ரபதி சிவாஜி மகாராஜ் சவுக் என்று அழைக்கப்படும்.
இவ்வாறு ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.
இதையும் படிங்க: முகலாய அரசர் அவுரங்கசீப்பை புகழ்ந்த எம்எல்ஏ அபு ஆஸ்மி சஸ்பெண்ட்... மகாராஷ்டிரா சபாநாயகர் நடவடிக்கை..!