ICC championship: கிங் கோலி ரிட்டர்ன்ஸ்.. பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம்.. மாஸ் காட்டிய இந்திய அணி.!
துபாயில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்று போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி குருப் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. துபாயில் நடைபெற்ற குரூப் போட்டியில் இந்திய அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடியது. வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆனால், பாகிஸ்தான் அணி சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இப்போட்டியில் விளையாடவில்லை. சஇந்திய அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சில் 49.4 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி 241 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக சவுத் ஷகீல் 62 ரன்கள் எடுத்தார். கேப்டன் ரிஸ்வான் 46, குஷ்தில் ஷா 38 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்திக் பாண்டியா 2, அக்சர், ஹர்ஷித் ராணா மற்றும் ஜடேஜா தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. கேப்டன் ரோஹித் சர்மாவும் ஷுப்மன் கில்லும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ரோஹித் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த விராட் கோலி, கில் உடன் இணைந்து 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். கில், 46 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஸ்ரேயாஸ் அய்யரும், கோலியும் சேர்ந்து 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 56 ரன்கள் எடுத்து ஸ்ரேயாஸ் அவுட் ஆனார். ஹர்திக் பாண்ட்யா 8 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
ஆனால், இறுதிவரை களத்தில் இருந்த கோலி, 111 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அசத்தினார். அவரது இன்னிங்ஸில் 7 பவுண்டரிகள் மட்டுமே அடித்திருந்தார். இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு துரோகம்... உளவு பார்க்க மாலத்தீவுடன் சீனா போட்ட ஒப்பந்தம்..!