அண்ணாமலை மாற்றப்படுகிறாரா?... வாய்ப்பு உண்டா?
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாகவும் தமிழக பாஜகவிற்கு வேறு தலைவர் நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது. அதற்கு வாய்ப்புள்ளதா என்பது பற்றி பார்ப்போம்.
தமிழக பாஜக தலைவராக குறைந்த கால அனுபவமே உள்ள அண்ணாமலையை நியமித்து பலரது புருவத்தை உயர்த்த வைத்தது பாஜக டெல்லி மேலிடம். திமுக ஆளுங்கட்சி ல், 40 ஆண்டுகளுக்கு மேல் உள்ள அதிமுகவுடன் கூட்டு, ஓராண்டு அனுபவம் கூட இல்லாத அண்ணாமலை என்ன செய்ய போகிறார் என்கிற கேள்வி பலர்முன் வந்தது. பொதுவாக பாஜகவுக்குள் மேல்தட்டு வகுப்பினர் ஆதிக்கம் அதிகம் இருக்கும். அண்ணாமலை போன்றோர் தாக்குபிடிப்பாரா என்கிற கேள்வியும் எழுந்தது. ஆனால் அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரி என்பதால் அவரால் எளிதில் அனைத்தையும் கிரகித்துக்கொள்ள முடிந்தது.
உடனடியாக தனக்கான வார் ரூமை அமைத்த அண்ணாமலை, தனக்கு இடையூறாக இருந்த தலைவர்களை ஒதுக்கினார். சில மூத்த தலைவர்கள் தாமாக ஒதுங்கி கொண்டனர். சில மூத்த தலைவர்களுக்கு கவர்னர் பதவி கொடுத்து அண்ணாமலை ஃப்ரியாக செயல்பட வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தது பாஜக மேலிடம்.
தொடர்ந்து தனது அதிரடி அரசியலை தொடங்கிய அண்ணாமலை சாதகம், பாதகம் இரண்டிலும் பிரபலமானார். அவரது அதிரடி பேட்டிகள், செயல்பாடு ஊழல் எதிர்ப்பு, மேடைப்பேச்சு காரணமாக குறுகிய காலத்தில் இளைஞர்களிடையே பிரபலமானார். திராவிட கட்சிகளை விரும்பாத இளைஞர்கள் அண்ணாமலை நோக்கி படையெடுக்க தொடங்கினர்.
இதையும் படிங்க: தமிழக பாஜகவின் புதிய தலைவர் இவரா?...
அண்ணாமலை திமுக ஃபைல்ஸ் ஒன்றை வெளியிட்டதன் மூலம் திமுகவுக்குள் கடும் பிரச்சனையை ஏற்படுத்தினார். மறுபுறம் தன்னிச்சையாக பாஜகவை வளர்ப்பேன் என பாஜக தலைமைக்கு வாக்கு கொடுத்த அண்ணாமலை அதிமுகவையும் சேர்த்து விமர்சிக்க தொடங்கினார். இது இதற்கு முன்னர் இருந்த பாஜக தலைவர்கள் யாரும் செய்யாத ஒன்று.
இதனால் அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது. அண்ணாமலை ஏதோ செய்யப்போகிறார் என்று எண்ணிய தலைமையும் மற்ற பாஜக தலைவர்கள் சொன்ன குற்றச்சாட்டை ஏற்காமல் பாஜக தனித்து போட்டியிட அனுமதித்தது. 2024 மக்களவை தேர்தலில் பாஜக தனித்து பாமகவுடன் சேர்ந்து போட்டியிட்டதன் மூலம் 12% வாக்குகளை பெற்றது. 8 இடங்களில் இரண்டாவது இடத்தை பாஜக பெற்றது. பாஜக வெல்லாவிட்டாலும் அதிமுகவை பின்னுக்கு தள்ளி 12% வாக்குகள் வாங்கியது அண்ணாமலையின் தலைமைக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்பட்டது. ஆனாலும் NDA கூட்டணியில் அதிமுக இருந்திருந்தால் 12 முதல் 15 தொகுதிகள் வெல்லும் வாய்ப்பை அண்ணாமலை தனது தனிப்பட்ட காரணத்தால் புறக்கணித்து விட்டார், வரும் 2026 சட்டமன்ற பொது தேர்தலிலும் பாஜக தனித்து நிற்பது நல்லதல்ல என தொடர்ச்சியாக மேலிடத்திற்கு பலரும் வலியுறுத்தினர்.
டெல்லி மேலிடமும் இதை ஏற்றுக்கொண்டதாக கருத்தும் பெரும்பாலான விமர்சகர்களால் வைக்கப்படுகிறது.
ஆனாலும் அண்ணாமலையை மாற்ற வாய்பில்லை. அப்படி அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்றால் அதிமுக பாஜக கூட்டணி வந்தால் மட்டுமே அதிமுகவுக்கு சங்கடம் வரக்கூடாது என்பதற்காக அண்ணாமலையை மாற்றலாம் மற்றப்படி பாஜக தனித்து நிற்பதாக இருந்தால் அண்ணாமலையை விட சிறந்த தலைவர் யாரும் இருக்க வாய்ப்பில்லை என்று பாஜக மேலிடம் கருதுவதாக கூறப்படுகிறது.
ஆகவே 17 ஆம் தேதி பாஜக மேலிட பொறுப்பாளர்கள் வர உள்ள நிலையில் அண்ணாமலை மாற்றத்திற்கான வாய்ப்பே இல்லை அவரே தலைவராக தொடர்வார். ஒருவேளை அதிமுக கூட்டணி அமைந்தால் மட்டுமே அண்ணாமலை மாற்றப்பட வாய்ப்புண்டு, ஆனால் அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பே இல்லை என்கிற நிலையில் அண்ணாமலை மாற்றப்பட வாய்ப்பே இல்லை என பாஜக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ‘இந்தியா கூட்டணி’ மக்களவைத் தேர்தலோடு முடிந்துவிட்டது: தேஜஸ்வி யாதவ் வெளிப்படை