அமீரின் வங்கி கணக்கில் இருப்பது போதை கடத்தல் பணம்: அடித்துச் சொல்லும் அமலாக்கத்துறை..!
இயக்குநர் அமீர் உள்ளிட்டோரின் வங்கி கணக்குகளிலும், போலியாக தொடங்கப்பட்ட நிறுவனங்களின் வங்கி கணக்குகளிலும் செலுத்தி சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக ஜாபர் சாதிக் செயல்பட்டு வந்ததும், அவர் சம்பாதித்த பணத்தை இயக்குநர் அமீர் உள்ளிட்டோரின் வங்கிக் கணக்குகளில் செலுத்தியதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்தியதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறையால் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். அதேபோல் போதைப் பொருள் விற்பனை செய்த பணத்தில் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்தது. ஜாபர் சாதிக் மீதான அமலாக்கத்துறை வழக்கில் இயக்குநர் அமீர் உட்பட 12 பேர் மீது 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் ஜாபர் சாதிக்கின் படத் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட 8 நிறுவனங்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவி்த்து அமலாக்கத்துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், ‘சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு மூளையாக ஜாபர் சாதிக் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் மூலமாக சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தில் சொத்துக்களும், சொகுசு கார்களையும் வாங்கி குவித்துள்ளார்.
இதையும் படிங்க: போதைப்பொருள் பணத்திற்கும், இயக்குநர் அமீருக்கும் தொடர்பா..? அமலாக்கத்துறை பகீர் குற்றச்சாட்டு..!
கடத்தல் மூலமாக கிடைத்த பணத்தை தனது குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்குகள் மட்டுமின்றி திரைப்பட இயக்குநர் அமீர் உள்ளிட்டோரின் வங்கி கணக்குகளிலும், போலியாக தொடங்கப்பட்ட நிறுவனங்களின் வங்கி கணக்குகளிலும் செலுத்தி சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் ஜாபர் சாதிக் ஆளுங்கட்சியான திமுகவின் முன்னாள் நிர்வாகியாக பதவி வகித்துள்ளதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. எனவே ஜாபர் சாதிக் மட்டுமின்றி அவரது சகோதரர் முகமது சலீமுக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது’ என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை மார்ச் இரண்டாவது வாரத்துக்கு தள்ளி வைத்து நீதிபதி சுந்தர்மோகன் உத்தரவிட்டுள்ளார்.
இயக்குநர் அமீர் இயக்கிய இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தை ஜாபர் சாதிக் தயாரித்திருந்தார். இயக்குநர் அமீர் இதுதொடர்பாக விசாரணைக்கு ஏற்கனவே ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.
இதையும் படிங்க: கனடாவில் 400 கிலோ தங்கம் ரூ.137 கோடி கொள்ளை… இந்தியாவுக்கு தப்பிய சிம்ரன் வீட்டில் ED சோதனை..!